பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றில் அடையாளம் தெரியாத தீவிரவாத கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியானதாகவும் 10 பேர் படுகாயமடைந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இதனால் பாரீஸ் நகரமே பெரும் பரபரப்பில் உள்ளது.
பாரீஸ் நகரில் சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகை கடந்த பல வருடங்களாக இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலை திடீரென சில அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து சரமாரியான துப்பாகிச்சூடு நடத்தியுள்ளனர். கண்மூடித்தனமாக நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியானதாகவும் அதில் இரண்டு பேர் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்றும் பிரான்ஸிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரியும் பத்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் சார்லி ஹெப்டோ பத்திரிகை சமீபத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாத் குறித்து கேலி செய்யும் விதமான கார்ட்டூன் ஒன்று வெளியிட்டதாகவும் அதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் பத்திரிகை அலுவலகத்தை தாக்கியுள்ளதாகவும் முதலகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து ஃப்ரான்ஸ் அதிபர் ஃப்ரான்சிஸ் ஹாலண்டே அமைச்சரவைக் கூட்டத்தை அவசரநிலையில் கூட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகிறார்.
இந்த பத்திரிகை இதற்கு முன்பாக நடப்பு விவகாரங்கள் தொடர்பாக சில பொறுப்பற்ற செய்திகளை வெளியிட்டதாக சர்ச்சையில் சிக்கியது. முன்னதாக கடந்த 2011-ஆம் ஆண்டு நபிகள் நாயகம் குறித்து கருத்துச் சித்திரம் வெளியிட்ட இந்த பத்திரிகை மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.