தமிழகத்தில் அனைத்து நுகர்வோருக்குமான மின் கட்டணம் நாளை (12ஆம் தேதி) முதல் உயர்த்தப்படுகிறது.
இதுகுறித்து தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை, நெல்லை, ஈரோட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்துவது குறித்து மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடைபெற்றது. அதன் அடிப்படையில், இன்று (12ஆம் தேதி) முதல் மின்சார கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
அதன்படி, வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரையிலான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தினால் யூனிட்டிற்கு 45 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 500 யூனிட் வரை பயன்படுத்தினால் முதல் 200 யூனிட்டிற்கு 50 காசுகளும், 201 முதல் 500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 60 காசுகளும், 500 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றிற்கு 85 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
தொழிற்சாலை
அதேபோல், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 85 காசுகளும், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.1ம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டிற்கு 85 காசுகளும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டிற்கு ரூ.1.85 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் அறிவிப்பு
இதையடுத்து, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிவிப்பில், ”2 மாதத்திற்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகள் கூடுதல் கடடணம் செலுத்த தேவையில்லை. இதனால், ஒரு கோடியே 61 லட்சத்து 21 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோர் பயன்பெறுவர்.
அதேபோல், கைத்தறி நெசவாளர்களுக்கு முதல் 100 யூனிட் வரை வழக்கம் போல் மின் கட்டணம் கிடையாது. 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் வீட்டுக்கான மின்கட்டணமே வசூலிக்கப்படும். மேலும், 11.83 லட்சம் குடிசை வீடுகளின் மின் இணைப்புகளுக்கும் கட்டணம் இன்றி தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.