கோடை காலத்தை சமாளிக்க உதவும் குளிர்பானங்கள்.

Fruit-Juices

அடுத்த வாரம் அக்னி நட்சத்திர கத்தரி வெயில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் அதை எதிர்கொள்ள பொதுமக்கள் பழங்கள் மற்றும் குளிர்பானங்களை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டு தயாரிப்பான மென்பானங்களை தவிர்க்க வேண்டும் என்பதொடு கோடைக்கேற்ற குளிர்பானங்கள் எவை என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

தக்காளி ஜூஸ் :

தக்காளி, இஞ்சி இரண்டையும் மிக்சியிலிட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, வடிகட்டி எலுமிச்சைச் சாறு, சர்க்கரை அல்லது குளுகோஸ் சேர்த்து அருந்தலாம். உடலை இளைக்கச் செய்யும், குளிர்ச்சியும்கூட.

நெல்லிக்காய் ஜூஸ்:

பெருநெல்லிக்காயை சீவி, கொட்டை நீக்கி மிக்சியிலிட்டு நீர்விட்டு அரைத்து, வடிகட்டி அதனுடன் தேன் அல்லது இளநீர் கலந்து அருந்தலாம். இரும்புச்சத்து மிக்கது. குடல் புண், கண் நோய், நீரிழிவு வராமல் காக்கும் பானம் இது.

பாகற்காய் ஜூஸ்:

பாகற்காயை வில்லைகளாக நறுக்கி விதை நீக்கி, ஆவியில் வேகவைத்து இறக்கி, ஆறி யதும் மிக்சியிலிட்டு அரைத்து, தண்ணீர், சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கி, உப்போ, பனங்கற்கண்டோ சேர்த்து அருந்தலாம். (வயிற்றிலுள்ள புழுக்களை ஒழித்து, நல்ல பசியை ஏற்படுத்தும். ஆஸ்துமா, மூச்சிளைப்பு நோயாளிகளுக்கு நல்லது.

இஞ்சி மோர்:

இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்சியில் நைசாக அரைத்து, அந்த விழுதை மோருடன் கலக்கி, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய மல்லித்தழை, உப்பு சேர்த்து அருந்தலாம். ஜீரணத்துக்கு உதவும், இரும்புச் சத்தும் உண்டு.

வாழைத்தண்டு ஜூஸ்:

முற்றாத வாழைத்தண்டைப் பொடியாக நறுக்கி நார் நீக்கி, மிக்சியில் நைசாக அரைத்து , வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அதனுடன் மோர், உப்பு சேர்த்து அருந்தலாம். வெயில் பாதிப்பால் ஏற்படும் சிறுநீரகக் கோளாறுகள் வராமலும், தண்டிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலையும் தீர்க்கும்.

கேரட் ஜூஸ்:

கேரட்டைத் தோல் நீக்கிக் கழுவி எடுத்துக் கொள்ளவும். பாதாம்பருப்பை ஊற வைத்துத் தோலுரித்து, கேரட்டுடன் சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும். காய்ச்சிய பாலில் அரைத்த கேரட் , கல்கண்டு, சிறிது ஏலக்காய் தூள் கலந்து அருந்தலாம். வைட்டமின் ஏ சத்து மிக்க பானம் இது.

Leave a Reply