முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே.வாசனின் 50-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி, நடிகர் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஜி.கே.வாசனின் பிறந்தநாளை ஒட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ரத்ததானம், மற்றும் அன்னதானம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
காங்கிரஸில் இருந்து ஜி.கே.வாசன் பிரிந்து சென்ற போதிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜி.கே.வாசன் தனது 50-ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார்.
இதனையொட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, மிலின் தியோரா, பிரபுல் படேல், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த நீரஜ் சந்திரசேகர், பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அம்பேத்ராஜன், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் முகுல்ராய், பிஜு ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த சதாகத் சத்பதி, லோக்தள் கட்சியைச் ஜெயந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ரஜினிகாந்த் வாழ்த்து: நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ரங்கராஜன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமாகா மூத்த தலைவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் அக் கட்சியினர் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தியதுடன், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் செய்தனர்.