சகாயம் கேட்ட கேள்விக்கு கருணாநிதி பதிலளிக்காதது ஏன்? சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

சகாயம் கேட்ட கேள்விக்கு கருணாநிதி பதிலளிக்காதது ஏன்? சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி
g ramakrishnan
திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக ஆட்சியில் மட்டுமே கிரானைட் ஊழல் நடந்தது போலவும் தங்கள் ஆட்சியில் எவ்வித விதிமீறலும் இல்லை என்பது போல பேசி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் அறிக்கை ஒன்றில் சகாயம் ஐ.ஏ.எஸ் கூறியபோது, “20 ஆண்டுகளாக கிரானைட் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதன்மூலம் ஒரு லட்சத்து ஆறாயிரம் கோடி இழப்பு என்றும் கூறியுள்ளார். 20 ஆண்டுகளாக இந்த முறைகேடு நடந்து வந்துள்ளது என்றால் அதில் பத்து ஆண்டுகள் திமுக ஆட்சிதானே. எனவே இதுகுறித்து விமர்சனம் செய்ய திமுகவுக்கு என்ன உரிமை இருக்கின்றது என்று பொதுமக்கள் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியபோது, ‘இருபது ஆண்டுகளாக கிரானைட் முறைகேடுகள் நடக்கிறது’ என்றும் ஒரு லட்சத்து ஆறாயிரம் கோடி இழப்பு’ என்றும் சகாயம் ஐ.ஏ.எஸ் கூறினார். இதில், பத்தாண்டுகள் தி.மு.க ஆட்சியில் இருந்தது. இதைப் பற்றி மேடைகள் தோறும் கலைஞரிடம் கேள்வி கேட்கிறேன். ஒருமுறையாவது பதில் கொடுத்தாரா? இத்தனைக்கும் சகாயம் அரசியல்வாதி அல்ல. ஐ.ஏ.எஸ் அதிகாரி. எனவே, இந்த இருதுருவ அரசியலுக்கு முடிவு கட்ட கடுமையாக உழைக்கிறோம். இதற்கு எதிராக நாங்கள் போராடும்போது, எதிரிகள் எங்களை அடிக்கிறார்கள். கூடவே, நண்பர்களும் சேர்ந்து அடிக்கும்போதுதான் கொஞ்சம் வலிக்கிறது. அது எதிரிகளுக்கு சாதகமாகப் போய்விடுமோ? என்ற வருத்தம் எனக்குண்டு.

அண்ணாதுரைக்குப் பிறகு தமிழக அரசியலை தி.மு.கவும் அ.தி.மு.கவும் சீரழித்துவிட்டார்கள். இவர்களுக்கு மாற்றாக ஒரு வலிமையான மாற்று உருவானதை மக்கள் விரும்புகிறார்கள். த.மா.கா எங்கள் அணிக்கு வந்தது தமிழ்நாட்டிற்கே நல்லது. தே.மு.தி.க, த.மா.காவை கொண்டு வந்ததில் மிகப் பெரிய பங்கு வைகோவுக்கு இருக்கிறது. கலைஞருக்கு எதிராக வைகோ சொன்ன கருத்துக்கு எதிராக கொந்தளிப்பு உருவானபோது, மன்னிப்பு கேட்டார் வைகோ. அதன்பிறகும் அவருடைய கொடும்பாவியைக் கொளுத்துகிறார்கள் என்றால், வைகோ மீது தி.மு.கவுக்கு உள்ள கோபத்தைப் புரிந்து கொள்ளலாம். மக்களின் பேராதரவோடு களத்தில் நிற்கிறோம். நிச்சயம் வெல்வோம்” என்று நம்பிக்கையுடன் முடித்தார் ஜி.ராமகிருஷ்ணன்.

Chennai Today News: G Ramakrishnan asked question to Karunanidhi

Leave a Reply