ஜி.எஸ்.டி மசோதா. அதிமுக எதிர்ப்பு, திமுக ஆதரவு. ஆச்சரியமளிக்கும் முடிவு
பாஜகவுடன் நெருக்கமாகவும், நட்புடனும் இருப்பதாக கருதப்படும் அதிமுக, நேற்று தாக்கல் செய்த ஜி.எஸ்.டி. மசோதாவிர்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜகவை அடிக்கடி விமர்சனம் செய்து வந்த திமுக திடீரென ஆதரவு அளித்துள்ளது. இந்த மாறுபட்ட நிகழ்வு அரசியல் வல்லுனர்களையே குழப்பம் அடைய செய்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி குறித்த ஜி.எஸ்.டி மசோதா ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகம் செய்து விவாதத்தை துவக்கி வைத்த இந்த மசோதா குறித்து காங்கிரஸ், அ.தி.மு.க., சிவசேனா உள்பட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினார்கள்.
அ.தி.மு.க. சார்பில் பேசிய எம்.பி. நவநீத கிருஷ்ணன், ஜி.எஸ்.டி மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜிஎஸ்டி மசோதா அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும் மசோதாவில் உள்ள சில அம்சங்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளதாகவும் கூறிய அவர், புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் ஜிஎஸ்டி வரிமுறையால் தமிழகத்திற்கு கணிசமாக அளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் பெட்ரோலிய பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஜிஎஸ்டி வரி எவ்வளவு என்று தெரியாமல் எப்படி மசோதாவை நிறைவேற்ற முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் சார்பில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜிஎஸ்டி மசோதாவை நடைமுறைப்படுத்த இரு அவைகளும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், ஜிஎஸ்டி வரி 18%க்கு மிகக் கூடாது என்ற உத்தரவாதம் தேவை என்றும் கூறினார்.
அதிமுக இந்த மசோதா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திடீர் திருப்பமாக தி.மு.க. சார்பில் பேசிய எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் ஜி.எஸ்.டி மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.