ஸ்மார்ட் போன் சந்தையில் புதிய வரவுகளும், புதிய அறிமுகங்களும் நிகழ்ந்து வருவது மட்டும் அல்ல, புதுமையான கருத்தாக்கங்களும், நுட்பங்களும் அறிமுகமாகி வருகின்றன. இரட்டை திரை போன், ஒல்லியான போன் என செல்போன் நிறுவனங்கள் கவனத்தை ஈர்க்க முயல்கின்றன. அந்த வகையில் சாம்சங்கின் அடுத்த போன் புதுமையான இரு பக்கமும் வளைந்த முனைகளைக் கொண்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
சாம்சங் அதன் பிரதான சாதனமான கேல்க்சி வரிசையில் இந்த ஆண்டு ‘கேலக்ஸி எட்ஜ் எனும் புதிய ரகத்தைச் அறிமுகம் செய்யவிருக்கிறதாம். இந்த போன் இருபக்கமும் வளைந்த முனையைக் கொண்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ‘சாம்சங் கெர்வ்ட் எட்ஜ்’ எனச் சொல்லப்படும் வளைவான முனை கொண்ட கேலக்ஸி நோட்டை அறிமுகம் செய்திருக்கிறது. எல்ஜியும் இதே போல ஜி பிலெக்சை அறிமுகம் செய்தது. இப்போது இரு பக்கமும் வளைந்த முனை கொண்ட சாதனத்துக்கான காப்புரிமை சாம்சங் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. புதுமை ஒருபக்கம் இருந்தாலும் பயன்பாட்டு நோக்கில் இவை எந்த அளவுக்கு உதவும் என்பது சுவாரஸ்யமான கேள்விதான்.