ஸ்மார்ட் போன்களோடு சேர்த்து செயலிகளும் (ஆப்ஸ்) பிரபலமாகி இருக்கின்றன. கேம் சார்ந்த செயலிகள், பயனாளிகள் மத்தியில் இன்னும் அதிகமாகச் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. செயலிகளில் கட்டணச் செயலிகள் இருந்தாலும் பல செயலிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால் இலவச செயலிகளில் இன் ஆப் பர்சேஸில் வாங்கும் வசதி பெரும் தலைவலியாக மாறி வருவதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இன் ஆப் பர்சேஸ் செயலி வடிவமைப்பாளர்களுக்கு வருவாய்க்கான நல்ல வழியாக இருந்தாலும் பயனாளிகளைப் பொறுத்தவரை இது பாதகமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. குறிப்பாகப் பிள்ளைகள் போனில் விளையாடும் போது தங்களை அறியாமல் இன் ஆப் பர்சேசில் ஈடுபடும்போது எதிர்பாராத செலவு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஐரோப்பாவில் குழந்தை ஒன்று இலவச கேம் விளையாட்டின் போது 6,700 டாலர் அளவுக்குப் பொருட்களை வாங்கியதாகத் திடுக்கிடும் உதாரணமும் சொல்லப்படுகிறது.
இந்த மாதிரியில் உள்ள குறைகளைச் சீராக்குவது தொடர்பாகத் தீவிர விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், இதற்குச் சரியான தீர்வு பயனாளிகள் உஷாராக இருப்பதுதான் என்கின்றனர். அதாவது போனில் இன் ஆப் பர்சேஸ் வசதியையே செயலிழக்க வைத்து விடுவதுதான் என்கின்றனர். ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ் என எல்லா போன்களிலும் இத்தகைய வசதி இருக்கிறது என்கின்றனர்.
இதனிடையே ஸ்மார்ட் போன் பயனாளிகளில் ஆறில் ஒருவர் ஏதாவது ஒரு வகை சைபர் தாக்குதலுக்கு இலக்காகி வருவதாக எக்ஸ்பிரியன் எனும் சர்வதேச நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. பிஷிங் உள்ளிட்ட பல விதமான மோசடி மற்றும் ஹேக்கிங் தாக்குதலுக்குப் பயனாளிகள் உள்ளாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 சதவீதம் பயனாளிகள் இது பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. எனவே ஸ்மார்ட் ஆப் பயன்பாட்டுடன் அதன் அபாயங்களையும் அறிந்து வைத்திருப்பது அவசியம்.