பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டம் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம். இந்த திட்டத்திற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்ய மத்திய அரசு தயாராக இருக்கும் நிலையில் பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர் முரளி மனோகன் ஜோஷி, இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் கங்கையை தூய்மைப்படுத்த முடியாது என்று கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய முரளி மனோகன் ஜோஷி, “கங்கையில் நீர் வரத்து தடையின்றி வராத வரையில் அதனை சுத்தப்படுத்துவது என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும். சின்னச் சின்ன குளங்களாக வெட்டி அவற்றை சுத்தப்படுத்துவது என்று தற்போதுள்ள முறைப்படி கங்கையை சுத்தம் செய்யத் தொடங்கினால், இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் அதனை சுத்தப்படுத்த முடியாது.
கங்கையில் கப்பல் போக்குவரத்து குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜோஷி “பெரிய படகுகளே கங்கையில் செல்ல முடியாதபோது, எப்படி கப்பல்களை இதில் செலுத்த முடியும். மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகம் முதலில் கங்கையின் தற்போதைய நிலை மற்றும் புவியியல் அமைப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்ட பிறகே, உள்நாட்டு நீர் வழிப்பாதை போக்குவரத்து குறித்து சிந்திக்க வேண்டும்.
கங்கையில் தடையின்றி நீர் வரத்து குறைந்தபட்ச அளவிலாவது இருந்துகொண்டே இருக்க வகை செய்ய வேண்டும் என்று ஆங்கிலேயர் காலத்தில் பண்டிதர் மதம் மோகன் மால்வியா போராடினார். அதற்காக, அவர்களை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் வைத்தார். ஆங்கிலேயர்கள் இருந்த வரை அந்த விதி அமலில் இருந்தது. இப்போது அது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. கங்கை நமது உயிர் நாடி. அதற்கு ஏற்படும் எந்த ஓர் அச்சுறுத்தலும், நமது கலாச்சாரத்துக்கும் பாரம்பரியத்துக்கும் ஏற்படும் அச்சுறுத்தலாகவே அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.