கருணாநிதிக்கு கங்கை நீர் பார்சல். இந்து மக்கள் கட்சியினர் ஏற்படுத்திய பரபரப்பு
இந்து மக்களின் புனித நீரான கங்கை நீர் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நாத்திக கருத்துக்களை கொண்ட கருணாநிதியும் இதுகுறித்து விமர்சனம் செய்துள்ளார். போகிறபோக்கில் விபூதி, குங்குமம் கூட விற்பார்கள். இதுதான் மதசார்பற்ற தன்மையா? என்று கிண்டலாக தனது பத்திரிகையில் தனக்குத்தானே கேள்விக்கேட்டு பதிலும் எழுதியுள்ளார்.
கருணாநிதியின் இந்த செயலை கண்டித்து அவருக்கு பாடம் புகட்டும் வகையில் கங்கை நீரோடு, விபுதி, குங்குமத்தையும் இந்து மக்கள் கட்சியினர் இன்று பார்சல் அனுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி அந்த பார்சலில் ஒரு கடிதமும் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தாங்கள் கூறியிருக்கும் கருத்து இன்னும் நீங்கள் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது. விபூதி, குங்குமம் கூட விற்பார்கள். போலிருக்கிறது. இதுதான் மதசார்பற்ற ஆட்சியா என்று வேதனைப்பட்டுள்ளீர்கள்.
பாரதநாட்டு மக்கள் நீரெல்லாம் கங்கை, நிலமெல்லாம் காசி, கல்லெல்லாம் சிவலிங்கம், மண்ணெல்லாம் திருநீறு என்ற நம்பிக்கையோடு வாழ்பவர்கள். அந்த நம்பிக்கையை தாங்கள் கிண்டல் செய்ததுபோல் உள்ளது.
இந்து கோவில் வருமானங்களை அரசு எடுத்துக் கொண்டு, கோவில் சொத்துக்களை அரசியல்வாதிகள் அனுபவித்துக் கொண்டு கோவில்களில் பிரசாத கடைகள் நடத்தி வருமானத்தை எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்தவர் தாங்கள். தங்களை போன்ற மதசார்பற்ற அரசியல் நாயகனாக மோடி ஆட்சி நடத்த வில்லை.
மது வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அறிவித்து விட்டு ஒருபுறம் உற்பத்தி, மறுபுறம் விற்பனை. முதலில் பாக்கெட், பின்னர் பாட்டில் என விற்பனை செய்ததுபோல் பாவம் மோடியால் பிழைக்க தெரிய வில்லை.
தி.மு.க.வில் 90 சதவீதம் இந்துக்கள் இருப்பதாகவும் அவர்களின் உணர்வுகளை மதிப்போம் என்றும், மு.க.ஸ்டாலின் கூறுகிறார். நீங்களோ இந்துக்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள்.
சுதந்திரம் அடைந்த பிறகும் ஆங்கிலேயர்கள் லண்டனில் இருந்து தமிழகத்தை ஆளவேண்டும் என்றும் சொன்னார்கள். எனவே தங்களுக்கு தேம்ஸ் நதி தண்ணீர் இனிக்கும். பாரதத்தில் ஓடும் கங்கை தண்ணீர் கசக்கத்தான் செய்யும். தங்கள் வாழ்வுக்கு அருமருந்தாக கங்கைநீர் அமையும். கூடுதல் இணைப்பாக விபூதி, குங்குமம்.
கங்கை, மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, அது தெய்வ நதி. கங்கை நதி இந்த நாட்டின் ஆன்மா என்று நேரு கூட கூறினார். நான் தெய்வ நம்பிக்கை இல்லாதவன்தான். இருந்தாலும் என் இறப்புக்கு பிறகு எனது அஸ்தியை கங்கையிலும், தூவ வேண்டும் என்றார்.
தங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவர்கள் நம்பிக்கை. நல்லெண்ணத்தை தரட்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.