கருட புராணம் பகுதி-1

garuda

1. தோற்றுவாய்: 18 புராணங்களில் ஒன்றான கருட புராணம் 19,000 ஸ்லோகங்கள் கொண்டது. இப்பூவுலகில் தவம் செய்வதற்குச் சிறந்த இடம் நைமிசாரணியம். அங்கிருக்கும் சவுனகாதி முனிவர்களைத் தரிசிக்க சூதமா முனிவர் வந்தார். அவரை முனிவர்கள் வரவேற்று உபசரித்து வணங்கினர். நால்வகை புருஷார்த்தங்களையும் அளிக்கவல்ல விஷ்ணு சம்பந்தப்பட்ட சாத்வீக புராணத்தைச் சொல்லுமாறு வேண்டினர். ஸ்ரீமந் நாராயணனை முன்பொரு சமயம் பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வான் பணிந்து உலக நன்மையைக் கருதி ஒரு கேள்வியைக் கேட்க, பகவான் அதற்குத் தக்க விடையளித்தார். அவ்வாறு திருமால் கருடனுக்குக் கூறியதையே உங்களுக்குக் கூறுகிறேன் என்று கூறி கருட புராணத்தைக் கூற ஆரம்பித்தார். கருடபுராணம் அளவில் பெரியதோ, சிறியதோ அல்லாமல் நடுத்தரமானது. இது பூர்வ காண்டம் என்று இருபெரும் பகுதிகளைக் கொண்டது. பல அத்தியாயங்களையும் கொண்டது. ஒவ்வொரு பகுதியிலும் முற்பகுதி பெரியது, பிற்பகுதி சிறியது.

உலகில் ஜீவன்களின் பிறப்பு, இறப்புக்குக் காரணம் என்ன? ஏன் பிரேத ஜன்மம் அடைகிறது? நரகம், சொர்க்கம் அடைவோர் யார்? ஏன்? நற்கதி கிடைப்பதற்கான வழி யாது? என்றெல்லாம் கேட்க, திருமால் புன்னகையுடன் விடை தரலானார்.

பிறந்தவன் இறப்பது நிச்சயம் என்பதை உணர வேண்டும். நமனுக்குப் பயந்து நல்ல தருமங்களை ஆற்றி அறநெறிப்படி வாழவேண்டும். வருணா சிரம தருமப்படி அதாவது அவரவர் குல மரபுப்படி வழுவாது நடப்போர் போகம், யோகம் ஒருங்கே பெற்று நீடுழி வாழ்ந்து இறுதியில் தமக்குரிய உலகை அடைவர். பற்றற்றவர்களாய், அறிஞர்களாகி பகவானைத் தியானித்து நல்வழியில் நற்பேறு பெற முயற்சி செய்ய வேண்டும் என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார். இத்தகைய அவர் ஆக்கிய வாழ்வே ஆனந்த வாழ்வாகும்.

2. திருமாலின் அவதாரங்கள்: காசியப முனிவருக்குக் கருடனே இப்புராணத்தைக் கூறினார். நான் வியாசரிடமிருந்து இதனைக் கேட்டேன் என்று மேலும் கூறலானார். முதலில் மஹாவிஷ்ணுவின் இருபத்து இரண்டு அவதாரங்களைப் பார்ப்போம்.

1. முதன் முதலில் குமாரன் வடிவில் தோன்றி பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்து தவம் செய்தார்.

2. பூவுலகை மீட்க வராக அவதாரம் எடுத்தார்.

3. பலவகைத் தந்திரங்களை உலகில் பரப்ப தேவரிஷியாய்த் தோன்றினார்.

4. நரநாராயணனாய் அவதரித்தார். (நரன், ஆவேசாவதாரம், நாராயணன் – அம்சாவதாரம்)

5. கபிலராக அவதரித்து சாங்கிய யோகத்தைத் தனது சீடர் அசூரிக்குக் கற்பித்தார்.

6. அத்திரி, அனுசூயை தம்பதிகளுக்கு மகனான தத்தாத்திரேயர் அவதாரம்.

7. சுவயம்பு மன்வந்ரத்தில் ருசி, ஆகுதியோருக்கு மகனாகத் தோன்றி பல யாகங்களைச் செய்தார்.

8. அடுத்து நபி, மேரு புத்திரனால் உருக்கிரமன் என்ற பெயரில் அவதரித்தது பற்றற்ற நிலையில் இருந்து அனைவர்க்கும் வாழ்வின் நன்னெறிகளைத் போதித்தார்.

9. பிருது என்ற பெயரில் தோன்றி பூவுலகத்திற்குத் தானியங்களையும், மூலிகைகளையும் வழங்கினார்.

10. மச்சாவதாரம் எடுத்து பிரளயத்திலிருந்து வைவஸ்வத மனுவைக் காத்தருளினார். வேதங்களையும் ரக்ஷித்தார்.

11. தேவாசுரர்கள் அமிர்தம் பெறப் பாற்கடலைக் கடைய வாசுகியை நாணாக்கி, மந்தர மலையை மத்தாக்கி கடையும்போது மலை உள்ளே அழுந்திட, அதனை ஆமை வடிவில் நிலைப்படுத்திய கூர்மாவதாரம்.

12. அடுத்து உலகில் மருத்துவம் பரப்ப எடுத்த தன்வந்திரி அவதாரம்.

13. அசுரர்களை ஏமாற்றி தேவர்களே அமுதம் பெறுமாறு பங்கிட எடுத்த அழகிய, கவர்ச்சியான மோஹினி அவதாரம்.

14. இரணியனைக் கொன்று, பக்தன் பிரகலாதனுக்கு அருளிட எடுத்த நரசிம்மாவதாரம்.

15. மகாபலிச் சக்கரவர்த்தியின் கர்வம் அடக்கி அருள மூன்றடி மண் கேட்க எடுத்த வாமனாவதாரம் (திருவிக்கிரமா அவதாரம்)

16. தந்தையாகிய ஜமதக்கினியைக் கொன்ற கார்த்தவீர்யாஜுனனையும், இருபத்தோரு தலைமுறை மன்னர்களையும் அழிக்கத் தோன்றிய பரசுராமர் அவதாரம்.

17. பராசரர், சத்தியவதி இருவருக்கும் மகனாகத் தோன்றிய வேத வியாசர்.

18. நாரதராக அவதரித்து தேவர்களுக்கு வாழ்க்கை முறை தத்துவங்களை உபதேசித்தது.

19. இராமாயணக் காவியத் தலைவனாக விளங்கிய இராமாவதாரம்.

20. கோகுலத்தில் கிருஷ்ணனாக அவதரித்து கம்சன், சிசுபாலன் தந்தவக்கிரர்களை அழித்துப் பாண்டவர்க்கு உதவுதல், கீதோபதேசம் முதலியன.

21. புத்த மதத்தைத் தோற்றுவிக்க புத்தராகத் தோன்றினார் திருமால்.

22. அடுத்து கல்கி அவதாரம் எடுக்கப்போவதும் அவரே.

(சனகர், பலராமன் அவதாரமும் அவரே என்று சிலர் கூறுவர்) அத்துடன் கஜேந்திரனுக்கு அருளத் தோன்றியது. வாலகில்யரிஷி (விராட் ஸ்வரூபமாய் விளங்குவது எல்லாம் அவனது அவதாரமே என்பர்.)

புராணத் தோற்றம் பற்றிய வேறுவிதமான வரலாறு

நாரதர், தட்சன், பிருகு முதலிய ரிஷிகள் பிரம்மலோகம் செல்ல அவர்களுக்குப் பிரம்மன் உபதேசம் செய்தார். பறவைகளின் அரசனாகிய கருடன் தவமியற்றி விஷ்ணுவைத் திருப்தி செய்ய, அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று பகவான் கேட்க, கருடன் தான் பெருமானின் வாகனமாக வேண்டும் வரம் கேட்டான். மேலும் பாம்புகள் தன்னைக் கண்டு அச்சமுறவேண்டும் என்றும், புராணம் இயற்றும் ஆற்றல் வேண்டும் என்று கேட்டுப் பெற்றான். இவ்வாறாக கருடன் இப்புராணத்தை விஷ்ணுவிடம் கேட்டு, பின்னர் பிரம்மனுக்குக் கூறினார். பிரம்மனிடம் இருந்து வியாசரும், அவர் மூலம் மற்றோரும் அறிந்தனர்.

3. படைப்பு (அ) சிருஷ்டி மற்றும் உத்தம மார்க்கம்

எங்கும் பிரம்மம் இருந்தது. எங்கும் நீர் சூழ்ந்திருந்தது. திடீரென்று ஒரு பொன் முட்டை (அண்டம்) தோன்றியது. அதனுள்ளிருந்து விஷ்ணு வெளியே வந்து நான்முகனைத் தோற்றுவிக்க, பிரம்மன் படைப்புத் தொழிலைத் துவங்கினார். படைக்க பிரமன், காக்க விஷ்ணு, அழிக்க சிவன் என்று ஆயிற்று. இந்த மூன்று வடிவமும் பிரம்மமே ஆகும். பிரம்மா முதலில் தேவர், அசுரர், மித்ருக்கள், மானவர்களைத் தோற்றுவித்தார். மற்றும் ராக்ஷசர்களும், யக்ஷர்களும், கந்தர்வர்களும் சிருஷ்டிக்கப்பட்டனர். பிரம்மன் முடியிலிருந்து பாம்புகள், மார்பிலிருந்து செம்மறி ஆடுகள், வாயிலிருந்து வெள்ளாடுகள், வயிற்றிலிருந்து பசுக்கள், பாதங்களிலிருந்து குதிரைகள், யானைகள், கழுதைகள், ஒட்டகங்கள் தோன்றின. உடலில் உள்ள உரோமங்களிலிருந்து மூலிகைகள் உண்டாயின. அவர் வாயிலிருந்து அந்தணர்கள், புஜங்களிலிருந்து க்ஷத்திரியர்கள், தொடைகளிலிருந்து வைசியர்கள், பாதத்திலிருந்து சூத்திரர்கள் தோன்றினர்.

விஷ்ணு கருடனுக்குக் கூறிய செய்திகள் : உலகில் உள்ள எண்பத்து நான்கு லக்ஷ யோனி பேதங்களில் இருபத்தோரு லட்சம் முட்டையிலிருந்து தோன்றும் அண்ட சங்கள், செடி, கொடி போன்ற இருபத்தோரு லட்சம் உற்பிச வகையைச் சார்ந்தவை. அடுத்து இருபத்தோரு லட்சம் சராயுச வகையைச் சார்ந்தவை. அதாவது கருப்பையிலிருந்து வெளி வருபவை. கொசு போன்ற வியர்வையிலிருந்து தோன்றுபவை இருபத்தோரு லட்சங்கள் சுவேதசம் எனப்படும்.

சிறந்த மானிடப் பிறவி

அனைத்திலும் மானிடப் பிறவியே சிறந்தது. எல்லா உயிர்களுக்கும் உணவு, உறக்கம், அச்சம், புணர்ச்சி ஆகியன உரியவை. ஞானம் மனிதனுக்கு மட்டும் உரித்தானது. கிருஷ்ணசாரம் என்ற கருப்பு நிற மானிகள் வசிக்கும் இடம் புண்ணிய பூமி. அதில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பர். அந்தப் பூமியும் தேவர்களையும், முனிவர்களையும், பிதுர்க்களையும் பூசிப்பவர்களுக்கு மிக்க நன்மை உண்டாகும். பூதம், பிரேதம், பைசாசங்களுக்கு ஆவியுருவம் மட்டுமுண்டு. தேகம் பெற்ற ஜீவர்கள் சிறப்புடையவர்கள். மானிடர்களில் பிராமணர்கள் சிறப்புடையவர். அவர்களில் பிரம்ம ஞானம் உடையவர்கள் அதிகச் சிறப்புடையவர்கள் ஆவர். சுவர்க்க மோட்சம் அடைய மானிடப் பிறவியே காரணமாகிறது. மண், பெண், பொன் ஆசை கொண்டவன், அதர்மம் புரிபவன், சுயநலக்காரனாகி தீவினைகளைச் செய்பவன் ஆகியோர் நரகத்தை அடைகின்றனர். எனவே கல்வியும், வித்தையும் கற்றவனும் ஞானத்தைப் பெற வேண்டும். ஞானேந்திரியங்கள் நாசமடைய உதவுகின்றன.

உத்தம மார்க்கம்

ஒருவன் செய்த பாவ புண்ணியங்களே ஒருவனுடன் மரணத்துக்குப் பின்னும் செல்லும். எனவே, தான தர்மங்களைப் பக்தி சிரத்தையோடு செய்பவன் பெரும் நன்மையை அடைகிறான். ஆகையால், உள்ளத் தூய்மையோடு, பக்தியுடன் தானதர்மங்கள் செய்வதும், முக்திக்குச் சாதனமான பரம பக்தி பிரபத்தி மார்க்கம் எனப்படும். அதுவே உத்தமமானதென்று பகவான் கருடனுக்குக் கூறுகிறார்.

பிரார்த்தனை

மனித வாழ்வில் பிரார்த்தனை ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. கருட புராணம் சூரியன், லக்ஷ்மி, விஷ்ணு பிரார்த்தனை களுக்கான நல்வழியைக் காட்டுகிறது. ஸ்ரீ விஷ்ணுமூர்த்தி உன்னைப் பிரார்த்திக்கிறேன். எனது கிழக்குப் பகுதியை உனது சுதரிசனச் சக்கரத்தாலும், தெற்கை கௌமுத்தி கதையாலும், மேற்கை சௌனந்தஹலா என்னும் கலப்பையாலும் காத்திடு. ஹேகமலக்கண்ணா, உன்னையே நான் சரணடைந்தேன். வடக்குப் பகுதியை உனது சதான முசலத்தால் காத்திரு. ஹே விஷ்ணு ! உன்னைத் துதி செய்கிறேன். உனது கத்தியையும் கேடயத்தையும் கொண்டு ஈசானப் பகுதியை (வடகிழக்கு) காத்திடு. அசுரர்களின் பகைவனே ! எனது கோரிக்கையை நிறைவேற்று. எனக்கு வாயவ்ய (வடமேற்குப்) பகுதியை உனது பாஞ்சசன்னயம் என்னும் சங்காலும், அனுத்வேத என்ற தாமரை மலராலும் காக்க. சந்திரஹாச வாளால் தென்கிழக்கைக் காத்திரு. நான் உன்னை வணங்குகிறேன்.

உனது ஸ்ரீவத்சம் என்னும் கழுத்தணி கொண்டு தென்மேற்குப் பகுதியைக் காத்திடுவாயாக. நீ மறைந்துள்ளாய். கருடவாகனனுடன் எழுந்தருளி அடியேனைக் காத்திடுக. நான் உன்னையே சரணடைந்தேன். சிறந்த பிரார்த்தனை ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஆகும். இந்தப் பாராயணம் செய்யும் அந்தணர்கள் எம்பெருமான் சன்னிதியில் வாழ்வர்; க்ஷத்திரியர்கள் போரில் வெற்றி அடைவர். வைசியர்கள் செல்வம் பெறுவர். மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வர்.

4. பாம்பு கடிக்கு ப்ராணேச்வர மந்திரம்

இது பாம்பு கடிக்குப் பயன்படும் மந்திரம். பாம்பு கடித்த இடத்தை அனுசரித்து அதன் கொடுமையை அறியலாம். ஆற்றில் பாம்பு கடி நிகழ்ந்தால் பிழைப்பது கடினம். மயான பூமியில், பாம்புப் புற்றில், மலைமீதில், கிணற்றில், மரப்பொந்தில் பாம்புகடி ஏற்பட்டால், கடியில் மூன்று பல் அடையாளம் இருந்தால் கடிபட்டவன் இறந்து விடுவான். அக்குள், இடுப்பு, தொண்டை, நெற்றி, காது, வயிறு, வாய், புஜம், முதுகு ஆகியவற்றில் கடித்தால் காப்பாற்றுவது கடினம். படைவீரனும் பிச்சைக்காரனும் பாம்பு கடிக்கப்பட்டால் இறப்பதற்கு அறிகுறி. மற்ற பாம்பு கடிகளுக்கு நிவாரணம் பெற பிராணேஸ்வர மந்திரம் உதவும். அஷ்ட தள தாமரை மலரில் மந்திரத்தின் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சொல்லை எழுத வேண்டும். அதைப் பாம்பு கடித்த ஆள் மீது வைத்து நீராட்ட வேண்டும். சிறிது நெய்யைக் குடிக்க வைக்கவும். உண்மையில் மந்திரத்தைச் செபித்து, அதேசமயம் சர்க்கரைப் கட்டிகளை வீட்டில் சிதறச் செய்யின் பாம்புகள் அந்த வீட்டை விட்டகலும்.

5. சாலக்கிராமம்

விஷ்ணுவின் பிரதி, சாலக்கிராமம் ஆகும். அது ஒருவகைக் கல்லால் ஆனது. கண்டகி ஆற்றங்கரையில் விஷ்ணு கல்லாகுமாறு சபிக்கப்பட்டார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. பலவகை சாலக்கிராமங்கள் பற்றி கருட புராணம் கூறுகிறது. எல்லா சாலக் கிராம கற்களும் புனிதமானவையே. ஒரு சாலக்கிராமத்தைத் தொட்டால் முற்பிறப்பில் செய்யப்பட்ட பாவங்களும் தீரும்.

1. கேசவ சாலக்கிராமம் என்பது சங்கு, சக்கர, கதை, தாமரைக் குறிகள் காணப்படுவது. இவை கூறப்பட்ட வரிசையில் இருக்க வேண்டும்.
2. மாதவ சாலக்கிராமத்தில் சங்கு, சக்கரம், பத்ம, கதை வரிசையில் இருக்கும்.
3. நாராயண சாலக்கிராமத்தில் பத்மம், கதை, சக்கரம், சங்கு என்ற வரிசை இருக்கும்.
4. கோவிந்த சாலக்கிராமத்தில் கதை, பத்மம், சங்கு, சக்கரம் என்ற வரிசை இருக்கும்.
5. விஷ்ணு சாலக்கிராமத்தில் பத்மம், சங்கு, சக்கரம், கதை என்ற வரிசை இருக்கும்.
6. மதுசூதன சாலக்கிராமத்தில் சங்கு, பத்மம், கதை, சக்கரம் என்ற வரிசை இருக்கும்.
7. திரிவிக்கிரம சாலக்கிராமத்தில் கதை, சக்கரம், சங்கு, பத்மம் என்று வரிசை இருக்கும்.
8. வாமன வடிவில் சக்கரம், கதை, பத்மம், சங்கம் என்ற வரிசையிலும்
9. ஸ்ரீதரன் வடிவில் சக்கரம், பத்மம், சங்கம், கதை என்ற வரிசையிலும்
10. ஹ்ருஷிகேசன் அமைப்பில் பத்மம், கதை, சங்கு, சக்கரம் என்ற வரிசையிலும்
11. பத்மநாபன் அமைப்பில் பத்மம், சக்கரம், கதை, சங்கு என்ற வரிசையிலும்
12. தாமோதரன் வடிவில் சங்கு, சக்கர, கதை, பத்மம் என்ற வரிசையிலும்
13. வாசுதேவன் வடிவில் சக்கரம், சங்கு, கதை, பத்மம் என்ற வரிசையிலும்
14. சங்கர்ஷனில் சங்கு, பத்மம், சக்கரம், கதை என்ற வரிசையிலும்
15. பிரத்யும்னனில் சங்கு, கதை, பத்மம், சக்கரம் என்ற வரிசையிலும்
16. அநிருத்தன் அமைப்பில் கதை, சங்கு, பத்மம், சக்கரம் என்ற வரிசையிலும்
17. புரு÷ஷாத்தமன் அமைப்பில் பத்மம், சங்கு, கதை, சக்கரம் என்ற வரிசையிலும்
18. அதோக்ஷஜ வடிவில் கதை, சங்கு, சக்கரம், பத்மம் என்ற வரிசையிலும்
19. நரசிம்மன் உருவில் பத்மம், கதை, சங்கு, சக்கரம் என்ற வரிசையிலும்
20. அச்சுதன் அமைப்பில் பத்மம், சக்கரம், சங்கு, கதை என்ற வரிசையிலும்
21. ஜனார்த்தனன் வடிவில் சங்கு, சக்கரம், பத்மம், கதை என்ற வரிசையிலும்
22. உபேந்திரனில் கதை, சக்கரம், பத்மம், சங்கு என்ற வரிசையிலும்
23. ஹரி அமைப்பில் சக்கரம், பத்மம், கதை, சங்கு என்ற வரிசையிலும்
24. ஸ்ரீ கிருஷ்ணனில் கதை, பத்மம், சக்கரம், சங்கு என்ற வரிசையிலும் அமைந்திருக்கும்.

6. தான தருமங்கள் விரு÷ஷாற்சனப் பலன்கள்

ஒருவன் தனது மரண காலத்திற்கு முன்பே கோதானம் முதலிய தானங்களைச் செய்வது நல்லது. பாத்திரம் அறிந்து தானம் செய்ய வேண்டும். தான இடமும் நல் ÷க்ஷத்திரமாக இருக்க வேண்டும். இத்தனையும் கூடியிருக்க ஒருவன் அகத்தூய்மையோடு இருந்தால் ஒரு கோடிப் பயனைத் தரும். எனவே, உத்தமப் பயனடைய, கோதானம் ஆகியவற்றை வேத சாஸ்திரங்களை ஓதி, உணர்ந்த செந்தண்மை பூண்ட அந்தணனான உத்தமனுக்கே கொடுக்கவேண்டும். ஒரு பசுவை ஒருவனுக்கே தானம் கொடுக்க வேண்டும். சாதுக்களிடம் நல்ல பொருள்களைப் பக்தி சிரத்தையோடு தானம் செய்பவன் அப்பிறவியிலாவது, மறு பிறவியிலாவது அதற்குரிய பலனைச் சந்தேகமின்றி அடைவான். சொற்ப அளவுடைய தான தர்மம் ஆனாலும் வாழுங் காலத்திலேயே தானமளிப்பவன் செல்வனாகி பலனை அடைந்து விடுவான். அன்னதானம், கோதானம் முதலியவற்றைத் தன் கையாலேயே செய்து விட்டால் மரணத்துக்குப் பின் பசி தாகம் அடையாமல் நல்லுலகைச் சேர்ந்து சுகிப்பான்.

விரு÷ஷாற்சனம் என்ற புண்ணிய கர்மத்தின் மகிமையால் உத்தம காலத்தில், உத்தம தலத்தில், உத்தம பிராமணனுக்கு தானம் கொடுத்தால் அதன் பலன் நிச்சயம் கைகூடும். யாகம் செய்வதையும், கோதானம் முதலிய சிறந்த தானங்களைச் செய்வதையும் விட விரு÷ஷாற்சவம் செய்வது மிகவும் முக்கியமான, உத்தமமான நற்கருமமாகும். எனவே, ஒரு மனிதன் நற்கதி அடைவதற்கு முதற்காரணமாக அமைவது விரு÷ஷாற்சனமே. இந்த விரு÷ஷாற்சனம் சிறந்தவனைக் குறித்துச் செய்யப்பட்டால் உடனடியாக ஏகோதிஷ்ட சிரார்த்தத்தையும் செய்து விடவேண்டும். விரு÷ஷாற்சனம் செய்யாவிட்டால் பிரேத ஜன்மம் பற்றாமல் விடாது.

காமிய விரு÷ஷாற்சன சர்க்கம்

முன்பு கூறிய நாட்களில் ஒரு நாள் தலசுத்தி செய்த பிறகு அக்கினிப் பிரதிஷ்டை செய்து ஒரே நிறமாக உள்ள காளைக் கன்று ஒன்றையும், அதற்குச் சிறிதான கிடாரி கன்று ஒன்றையும் மஞ்சள் நீராட்டி ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்து, அவற்றின் வாலில் தர்ப்பணம் செய்துவிடுத்து, நாந்தி சிரார்த்தம் செய்து ஒரு பக்ஷம் பதினைந்து நாட்கள் வரையில் பிராமணர்களுக்குப் போஜனம் செய்வித்து வெள்ளி, திலம், உதகக் கும்பம், ஆடைகள் ஆகியவற்றை தானம் செய்தால் நூற்றொரு தலைமுறையில் உள்ளவர்களும் சுவர்க்கத்தை அடைவர். இதற்கு காமிய விரு÷ஷாற்சன சர்க்கம் என்று பெயர். பகவான் மேலும் தான தரும விசேஷங்களையும், விரு÷ஷாற்சனம் பற்றியும் கூறுகிறார். ஒருவன் மரித்த பதினொன்றாம் நாளிலாவது சோடச சிரார்த்தத்தைச் சபிண்டி கரணத்துக்கு முன்னதாகவே செய்து ததியாராதனம் செய்து பல தானமும் கொடுக்கவேண்டும். பருத்தி ஆடையின் மீது செம்பினால் வட்டில் செய்து வைத்து அதில் சாளக்கிராமம் வைத்து, ஆடை முதலியவற்றால் அலங்கரித்து ஆராதனை செய்து நற்பிராமணனுக்கு அதையும் தானமாகக் கொடுக்க வேண்டும். வைதரணி நதியைக் கடக்க, கரும்பினால் ஓடம் செய்து வெண்பட்டினால் அதனைச் சுற்றி நெய் நிரம்பிய வெண்கலப் பாத்திரத்தை அதனுள் வைத்து ஸ்ரீமந் நாராயணனை அர்ச்சித்து அந்த ஓடத்தை பிராமணனுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும்.

சக்தியை அனுசரித்துப் பொருள் கொடுத்துத் தில தானமும், சய்யா தானமும் செய்ய வேண்டும். மரித்தவரைக் குறித்து கிரியைகளைச் செய்யும்போது அந்தணர்களுக்குப் பூரி (தட்சிணை) கொடுப்பவன் தான் வேண்டிய நல்லவற்றை எல்லாம் அடைந்து மகிழ்வான். அவன் பிரேத ஜன்மத்தை அடைய மாட்டான். புண்ணியலோகம் அவனுக்குக் கிட்டும்.

தானங்கள் நான்கு வகைப்படும். அவையாவன :

1. பலனை எதிர்பாராமல் ஓர் உத்தம அந்தணர்க்குச் செய்யும் தானம் நித்திய தானம் எனப்படும்.
2. தீமை நீங்க (அ) தவமாகக் கொடுக்கும் தானம் நைமித்திக தானம் எனப்படும்.
3. புத்திர சந்தானம், வெற்றி, தனம் வேண்டிச் செய்வது காம்ய தானம்
4. பகவானைத் திருப்தி படுத்துவதற்காகவே கொடுக்கப்படும் தானம் விமல தானம் ஆகும்.

7. பிராயச்சித்தம்

ஒருவன் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதே பிராயச்சித்தம் எனப்படும். ஓர் அந்தணனைக் கொல்வதே மிகப் பெரிய பாவம் ஆகும். இந்தப் பாவத்தைச் செய்தவன் இலைகள், சருகுகள், உலர்ந்த புல் போன்றவற்றால் ஒரு குடிசை அமைத்து அதில் பன்னிரண்டு ஆண்டுகள் வசிக்க வேண்டும். (அ) சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும். (அ) மலையிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். தீக்குளித்தல் (அ) நீரில் மூழ்கி இறத்தலும் பிராயச்சித்தமாகும்.

சில சமயம் பிராமணப் பண்டிதர்களுக்கு உணவளித்தல் போன்ற சாதாரண தண்டனைகளும் உண்டு. கங்கை, யமுனை, சரசுவதி சந்திக்கும் திரிவேணி சங்கமம் ஒரு புனித தீர்த்தத் தலமாகும். ஒருவன் மூன்று இரவு, மூன்று பகல் இதில் நீராடி உபவாசம் இருப்பதாலும் மேற்கூரிய பாவத்துக்குப் பரிகாரம் (அ) பிராயச் சித்தம் ஆகும். தங்கத்தைத் திருடும் ஒரு பிராமணனை மன்னன் கதையால் அடித்து, பன்னிரண்டு ஆண்டுகள் குடிசையில் வாழ்வது ஒரு பரிகாரம் ஆகும். ஒரு குடிகாரனுக்கு உரிய பிராயச் சித்தமாக சூடான ஒயினைக் குடித்தலும், அத்துடன் பால், நெய், (அ) கோமியம் குடித்தல். ஒரு புனித தீர்த்தத்தில் ஒருவன் மரணமடைந்தால் அவனுடைய பாவங்களுக்கு அதுவே பரிகாரம் ஆகும். கணவன் செய்த எல்லா பாவங்களும், அவனுடைய மனைவி கணவனுடன் உடன்கட்டை ஏறுவதால் பரிகாரமாகி விடும். மொத்தத்தில் கற்புடைய மனைவி பாவம் எதுவும் செய்யமாட்டாள்.

8. தோஷ பரிகாரங்கள்

பிரேத ஜன்மம் பெற்றவன் தன்னவர் கனவில் தோன்றினாலும், துன்பங்களைச் செய்தாலும் அது பற்றி பெரியோர்களிடம் தெரிவித்து அவர்கள் காட்டும் தர்மவிதிகளில் சித்தம் வைத்துத் தென்னை, மா, சண்பகம், அரசு ஆகிய மரங்களை வைத்துப் பயிர் செய்யலாம். நந்தவனம் அமைக்கலாம். பசுக்களுக்கு மேய்ச்சல் நிலம் அமைக்கலாம். அந்தணர்களுக்குப் பூதானம் செய்யலாம். நீர் நிலைகள் ஏற்படுத்தலாம். பகவத் கைங்கரியம், பாகவத கைங்கரியம் செய்யலாம். புனித நதிகளில் நீராடி தான, தருமங்கள் செய்யலாம். தோஷ காரணமாக எதிலும் நாட்டம் இல்லாமல் போனாலும் ஊக்கமுடன் முயன்று அந்தந்த தர்மங்களைச் செய்து இன்பம் அடையலாம். இவ்வாறு செய்வதால் பிரேத ஜன்மத்தின் பிரேத சரீரம் நீங்கிவிடும். அவன் குலம் விளங்க ஒரு புத்திரன் உண்டாகவும் செய்வான்.

பிரேத ஜன்ம தோஷத்தால் ஏற்படும் துன்பங்கள் தொலைய பெரியோர்களின் அறவுரையை, அறிவுரையை நம்பி ஏற்க வேண்டும். ஸ்நானம், ஜபதபம், ஹோமம், தானம் முதலியவற்றால் பாவநிவாரணம் அடைந்து நாராயண பலி செய்ய வேண்டும். புண்ணிய காலங்களில் புண்ணியத் தலங்களில் பித்ருக்களைக் குறித்து தானதர்மங்களைச் செய்தால், பூத, பிரேத, பைசாசங்களால் தொல்லையோ, துன்பமோ ஏற்படாது. மாதா, பிதா, குரு ஆகியோரைப் பூசிப்பது ஒருவர்க்குத் தலையாய கடமையாகும். தாய், தந்தை மரித்த பின், அவர்களைக் குறித்துச் செய்யப்படும் தான தர்மங்களின் பயனை அவனே அடைகிறான்.

9. பிரேத ஜன்மம் அடைவதற்கான காரணங்கள்

ஒருவன் பிரேத ஜன்மம் அடைவதற்கான பல காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைக் கீழே காண்க. பூர்வ ஜன்மத்தில் மகாபாவம் செய்தவனே பிரேத ஜன்மம் அடைவான்.

1. நீர்நிலைகள் ஏற்படுத்துதல், தண்ணீர்ப்பந்தல் வைத்தல். சத்திரம், தேவாலயம் கட்டுதல் போன்ற தருமத்தை ஒருவன் செய்திட, அவன் மரித்தவுடன் அவன் குலத்தில் பிறப்பவன் அவற்றை விற்றுவிட்டால் பிரேத ஜன்மம் பெறுவான்.

2. தருமத்தைச் செய்தவனே விற்றாலும் பிரேத ஜன்மம் பெறுவான்.

3. பிறருக்குரிமையான பூமியை அபகரித்தவன் பெறுவான்.

4. அடிபட்டு, இடிபட்டு, இடி தாக்கி, தீக்குளித்து, தூக்கிட்டுக் கொண்டு, விஷம் உண்டு, மாடு மூட்டி இறந்தவர்கள் சம்ஸ்காரம் செய்வதற்கு நாதியற்றவன், திருடனால் மரித்தவன், அயலூரில் இறந்தவன், பெற்றோர்க்குச் சிரார்த்தம் செய்யாது மரணமடைந்தவன் ஆகியோர் பிரேத ஜன்மத்தை அடைவர்.

5. ஒருவனுடைய அந்திமக் கிரியைகளை அந்தச் சாதியிலுள்ளவரே செய்ய வேண்டும். வேறு ஒருவர் செய்தால் பிரேத ஜன்மமடைவர்.

6. மலையிலிருந்தோ, கட்டிலில் படுத்து உள்ளவாறோ, இறை நாமம் உச்சரிக்காமல் உயிர்விட்டவன், ரஜஸ்வாலை பெண், சண்டாளன் ஆகியோரைத் தீண்டிவிட்டு சூதகத் தீட்டோடு இறந்தவன் பிரேத ஜன்மத்தை அடைவான்.

7. தாய், மனைவி, பெண், மருமகள் முதலியோரின் சரீர தோஷத்தைப் பார்க்காமலேயே, பிறர் சொல் கேட்டு ஜாதிப்பிரஷ்டம் செய்தவன், மனச் சாட்சிக்கு விரோதமாகத் தீர்ப்பு வழங்கியவன், அந்தணர், பசுக்களைக் கொல்பவன், இமிசிப்பவன், மதுபானம் அருந்துவோர், குருபத்தினியைக் கெடுத்தவன், வெண் பட்டு, சொர்ணம் திருடியவன் பிரேத ஜன்மம் அடைவர். பிரேத ஜன்மம் அடைந்தோர் எப்போதும் கொடிய பாலைவனங்களில் சஞ்சரித்து வருந்துவர்.

10. பிரேத ஜன்மத்தால் ஏற்படும் துன்பம்

பிறனில் விழைபவன், பிறர் பொருளைக் கவர்பவன், காற்று வடிவ பிரேத ரூபத்தைப் பெற்று, பசி, தாகத்தோடு வருந்தி யமனுடைய காவலையும் மீறி, எங்கும் அலைந்து திரிவான். அவன் தன் குடும்பத்தில் உள்ளவர்களையும், உறவினர்களையும் துன்பப்படுத்துவான். பிதுர்க்களின் தினத்தில் வீட்டிற்கு வரும் பிதுர்க்களை உள்ளே போக விடாமல் தடுத்து நிறுத்துவான். அவர்களுக்குத் தரும் அவிசுகளை வாங்கிப் புசிப்பான். தன்னுடைய புத்திரனுக்கும் சந்ததி இல்லாமல் செய்வான். பலவித நோய்களை உண்டாக்குவான். அவன் தான் சார்ந்த குலத்தையே பீடிப்பான். தீய குணம் உடையோர்க்கு அவன் அதிகம் துன்பங்கள் விளைவிப்பான். பாவங்கள் செய்தல், ஆண் வாரிசு பிறவாதிருத்தல், பிறந்து பிறந்து இறத்தல், குடும்பத்தில் ஒற்றுமையின்மை, பசுக்களைக் காப்பாற்ற இயலாமை, நண்பருடன் விரோதம், உபவாசம் தடைபடல், நற்காரியங்கள் செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாதல், தாய் தந்தையரை இகழ்தல், அயலாரைக் கொல்ல முயற்சித்தல், அதர்மங்களையே நினைத்தல், பொருள்கள் அழிவு, களவு, மனைவியுடன் வாழ முடியாமை, சண்டை, சச்சரவு ஆகிய அனைத்தும் பிரேத ஜன்மம் அடைந்தவனாலேயே நிகழ்வதாகும்.

தான தர்மங்கள் செய்வோர், ஹரி நாம சங்கீர்த்தனம் செய்வோர், சிரார்த்தங்களைச் செய்வோர், புனிதத் தல யாத்திரை மேற்கொள்வோர் போன்றோர்க்குத் பிரேத ஜன்மம் அடைந்தவனால் ஒரு துன்பமும் நேராது. பிரேத ஜன்மம் அடைந்தவன் பயங்கரமான முகத்தோடும், வாள் போன்ற பற்களோடும் தன் குலத்தோர் கனவில் தோன்றி ஐயையோ ! என்னைக் காப்பாற்றுவதற்கு ஒருவரும் இல்லையா? நான் பசி, தாகத்தினால் அவதிப்படுகிறேனே, என் பிரேத ஜன்மம் நீங்கவில்லையே எனக் கதறுவான். இவ்வாறு எந்தக் குலத்தில் பிரேத ஜன்ம தோஷம் நேரிட்டிருக்கிறதோ அந்தக் குலத்தில் துயரமும் துன்பங்களும் சூழ்ந்து கொண்டே இருக்கும்.

11. பிரேத ஜன்மம் நீங்க வழி

அடுத்து, பகவான் கருடனை நோக்கி பிரேத ஜன்மம் தொலைய என்ன செய்ய வேண்டும் என்று விளக்கலானார். பிரேத ஜன்மம் நீங்க விரும்பும் ஒவ்வொருவரும் தான் இறப்பதற்கு முன்பே தனது கையாலேயே விரு÷ஷாற் சர்க்கம் செய்யவேண்டும். உயிருடன் இருக்கும்போதோ, இறந்த பிறகோ இது செய்யப்பட்டால் அவனுக்குப் பிரேத ஜன்மம் வருவதில்லை. இதைத் தவிர வேறு எந்த கர்மாவினாலும் இதைத் தடுக்க முடியாது.

இதனை ஒருவன் இறந்த பதினொன்றாம் நாளன்று செய்ய வேண்டும். அப்படிச் செய்யப்படின் அவன் பெரியோர்கள் அடையும் உலகை அடைவான். முக்தி தரும் நகரம் ஏழினுள் ஒன்றில் இறந்தவனும் நல்லுலகை அடைவான். இந்தக் கர்மாவைப் புத்திரன், மனைவி, பெண் வயிற்றுப் பிள்ளை, (அ) பெண் செய்யலாம். புத்திரன் இருந்தால் அவன் மட்டுமே செய்ய வேண்டும். பிள்ளை இல்லாமல் இறந்தவன் நரகத்தையே அடைவான். எனவே எத்தகைய அரிய கர்மாவைச் செய்தாகிலும் ஆண்மகன் ஒருவனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நல்வினை செய்யாதவன், புத்திரன் இருந்தும் கிருத்தியங்கள் செய்யாமல் விட்டால், இரவு பகலாக, பசி, தாகத்தோடு அலைந்து திரிந்து பின்னர் பலவகைப் பிறவிகள் எடுத்து மீண்டும் மனிதரில் கடை ஜாதியில் பிறப்பான். எனவே, ஒருவன் நல்லுலகை அடைவதற்குரிய நல்வினைகளைச் செய்யத் தெரிந்தவன் நற்கர்மங்களைச் செய்யக் கடவன் என்று பகவான் கருடனுக்குக் கூறினார்.

12. பிறத்தலும் இறத்தலும்

ஒருவன் மரிக்கும் காலத்தில் அவன் ஜீவனைக் கவர்வதற்காகவே காலன் (அ) இயமன் நியமிக்கப்பட்டிருக்கிறான். உலகில் வாழ்கின்ற ஜீவர்கள் அவரவர் செய்யும் தோஷங்களால் ஆயுள் குறைந்து மரிக்கின்றனர். பாவ காரியங்களைச் செய்பவர்கள் யமலோகத்தில் எப்போதும் நரகத்தில் உழல்வார்கள். அறநெறிகளிலிருந்து நழுவி வாழ்பவர்கள் யமலோகத்தில் வேதனைப்படுகிறார்கள். தேவாராதனை செய்யாத தினம் மஹான்களையும், நல்லவை ஆற்றுவாரையும், வழிபடாமை, சாஸ்திரம் உணராத நாள் வீணேயாம். எந்த ஜீவனுக்கும் அதன் உடல் நிலையானதில்லை. அது கர்ம வினையினால் உண்டானது என்றறிந்து மீண்டும் பிறவாமலிருக்க நற்கருமங்கள் ஆற்றவேண்டும். அழியும் உடல் மீது ஆசை வைக்காமல் பகவத், பாகவத, ஆசாரிய கைங்கரியங்களைச் செய்ய வேண்டும். பிறப்பினால் ஏற்படும் துன்பம், மற்றும் கர்மாதிகளை எண்ணி ஜீவனானவன் நல்லொழுக்கத்துடனும், நற்பண்பு களுடனும் வாழவேண்டும். பூர்வ ஜன்ம புண்ணியத்தால் உறுதியானதை உண்பவன் நிரதிசய இன்ப வீடாகிய பரமபதத்தை அடைகிறான். பூர்வ ஜன்மத்தில் நன்னெறியில் வாழ்ந்து, தான தர்மங்களைச் செய்து வந்த சேனன் தன் மனைவி மக்களோடு நெடுங்காலம் சுகமாக வாழ்ந்து இறுதியில் நல்லுலகை அடைகிறான். கருவுற்ற ஆறு மாதத்தில் கரு கரைந்து ஒரு திங்களில் விழுந்தால் ஒரு நாளும், இரண்டானால் இரண்டு நாட்களும், மூன்றானால் மூன்று நாட்களும், நான்கானால் நான்கு நாட்களும், ஐந்தாயின் ஐந்து நாட்களும், ஆறானால் ஆறு நாட்களும் கருவுற்ற தாய்க்கு மட்டும் சூதகத் தீட்டு உண்டு. தந்தைக்குத் தீட்டு இல்லை. செய்ய வேண்டிய கர்மாவும் ஒன்றும் இல்லை.

கரு அழியாமல் குழந்தை பிறந்து; மூன்று வயதுக்குள் இறந்துவிட்டால் அதை உத்தேசித்து ஊர் குழந்தைகளுக்குப் பால் சோறும், தயிர் சோறும் கொடுக்க வேண்டும். மூன்று முதல் ஐந்து வயதுக்குள் மரித்தாலும் அவ்வாறே பாலர்களுக்கு அன்னம் கொடுக்க வேண்டும். பிறந்த குழந்தை இறந்தாலும் தீர்த்தம், பால், பாயாசம் கொடுக்கலாம். புனரபி மரணம் என்பதை உணர்ந்து மறுபிறவி இல்லாமல் மீள தான தர்மங்களைச் செய்யாமல் வாழ்நாளை வீண் நாளாக்கினால் ஒருநாளில் ஒரு வேளை கூடப் பசியார உண்ண வழியில்லா வறியோனுக்கு மகனாகப் பிறந்து வருத்தமுற்று மடிந்து மீண்டும் பிறப்பான். அடுத்த பிறவியில் அரசனாக வேண்டும், சகலகலா நிபுணன் ஆக வேண்டும் என்றெண்ணாமல் பிறவியே இல்லாமல் இருப்பதற்கான காரியங்களைச் செய்ய வேண்டும். புனித நீராடி தூய்மை அடையலாம். உண்மை பேசுதல், கீழ்ப்படிதல், இன்சொல் போன்றவை கொண்டு சகல சாஸ்திர சம்பன்னனாக வேண்டும். தனக்குள்ள வருவாய்க்கேற்ப தானதருமங்கள் செய்து வாழ வேண்டும்.

Leave a Reply