கடந்த சனிக்கிழமை மத்திய அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நேற்று காலை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் ரூ.5 உயந்த்தப்பட்டுள்ளதால் நடுத்தர வர்க்க பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விமான எரிபொருள் விலையும் 8.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விலையேற்றம் சர்வதேச சந்தையின் நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் அல்லது சந்தை விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.5 அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அந்த சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.610க்கு விற்பனை செய்யப்படும்.
இதேபோல், விமான எரிபொருள் விலை, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.3,849 அல்லது 8.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் விமான எரிபொருளின் விலை கிலோ லிட்டருக்கு ரூ.50,363 ஆக விற்பனை செய்யப்படும்” என்று அதில் கூறப்பட்டு உள்ளது