குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை அனைவரையும் பாடாய்ப் படுத்துகிறது வாயுத்தொல்லை.
இந்த பிரச்னை எதனால் வருகிறது, இதற்கு தீர்வு என்ன என்பது குறித்து விளக்குகிறார் சென்னையை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா.
’’பசி எடுக்கும் போது சாப்பிடாமல் இருப்பது, அதிகமான மன அழுத்தம், அதிகமான மாத்திரைகள் சாப்பிடுவது, பின்னிரவில் தூங்குவது, சரியாக வேகாத உணவை சாப்பிடுவது, குடல் புண் உள்ளிட்ட பல காரணங்கள் வாயுத்தொல்லைக்கு காரணமாகின்றன.
புளித்த ஏப்பம் வருவது.. நெஞ்சு எரிச்சல், வாய் எரிச்சல் மட்டுமின்றி சாப்பிட்டு முடித்தவுடன் வயிறு உப்பிவிடுவதும், சமயங்களில் மூச்சு விடுவதற்கும் கடினமாக இருப்பதுடன் சாப்பிட்ட 2- 3 மணி நேரம் வரையிலும் கூட இதே நிலை நீடிப்பதும், துர்நாற்றத்துடன் கூடிய காற்று பிரிவதும் வாயுப் பிரச்னைகளுக்கான அறிகுறிகளாக எடுத்துக் கொள்ளலாம்”என்ற டாக்டர் இதற்கான தீர்வு குறித்தும் பேசினார்.
’’உப்பு, புளிப்பு, காரம், மசாலா போன்ற உணவுப் பொருட்களை குறைந்த அளவே எடுத்துக் கொள்ள வேண்டும். புகையிலை, காபி, டீ, ஊறுகாய் இதெல்லாம் கூடவே கூடாது. ஜீரண கோளாறு உள்ளவர்கள் கொழுப்புச் சத்து அதிகம் உள்ள தயிரை சாப்பிடவே கூடாது. வாயுத் தொல்லை உள்ளவர்கள் குழைந்த உணவை சாப்பிடுவதுடன் வெதுவெதுப்பான நீரை குடிப்பது நல்லது. அளவான ஆகாரமே இந்த பிரச்னைக்கு முதன்மையான தீர்வாகும். இதற்காக டாக்டரிடம் தான் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருந்தே சரிபடுத்திக் கொள்ள முடியும்.
தினமும் தியானம் செய்வதுடன் நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் சாப்பிடும் முன்பாக காலையும் மாலையும் அரை கப் பால் குடிக்கலாம். நெல்லிகாய் பவுடரை 2 டீஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து ஒரு நாளைக்கு 4 முறையாவது குடிக்கலாம்.அதிமதுரம் பவுடர் ஒரு டீஸ்பூன் எடுத்து அதை ஒரு டீஸ்பூன் தேனுடன் சமமாக கலந்து, காலையும் மாலையும் சாப்பிடுவதற்கு முன்பாக சாப்பிடலாம். சாப்பிட்டதும் மிதமான சூட்டில் சுக்கு போட்டு ஊறவைத்த தண்ணீரை குடிக்கலாம்.தொடர்ந்து இவ்வாறாக செய்தால் வாயுப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்’’என்கிறார்