அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய கவுதம் மேனன் தற்போது சிம்பு நடிப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் கவுதம் மேனனின் அடுத்த படம் ஹாலிவுட் படம் என்றும், அதில் அஜீத்தான் ஹீரோ என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஒரு கல்லூரியில் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் கவுதம் மேனன், மாணவர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது, அஜீத்தை ஹாலிவுட்டுக்கு அறிமுகப்படுத்துவேன் என்றும், அது அனேகமான ‘என்னை அறிந்தால்’ படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம் என்றும் கூறியுள்ளாராம்.
‘என்னை அறிந்தால்’ திரைப்படமே ஹாலிவுட் ஸ்டைலில் இருப்பதாக பலர் விமர்சனம் செய்ததால் தனக்கு இவ்வாறான ஐடியா வந்ததாகவும், அஜீத் தற்போது ஆரம்பிக்கவுள்ள படத்தை அடுத்து அவர் ஹாலிவுட் படத்தில் நடிப்பார் என்றும் கவுதம் மேனன் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் அஜீத் நடிக்கவுள்ள ஹாலிவுட் படத்தில் படத்தின் வசூலுக்கு ஏற்றவாறு அவருக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும் இந்த வகையில் அவருக்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகை சம்பளமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி போன்றே அஜீத்தும் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் அஜீத் நேரடியாக ஹாலிவுட்டில் விரைவில் களமிறங்கவுள்ளார் என்ற செய்தி அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.