ஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்த வாடிகன் பாதிரியார் மீது அதிரடி நடவடிக்கை
கிறிஸ்துவர்களின் புனிதமான தலமாக கருதப்படும் வாடிகன் சிட்டியின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் பாதிரியார் ஒருவர் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும் இதை சொல்வதில் தான் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த கருத்தை அடுத்து அவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மான்சிங்கர் கிறிஸ்டோப் சாரம்சா என்ற பாதிரியார் வாடிகன் சிட்டியில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்தவர். இவர் வெளிநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தபோது, ‘‘நான் ஒரு ஓரின சேர்க்கையாளன். நான் எனது நண்பரை காதலிக்கிறேன். அதை வெளிப்படையாக சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். ஓரின சேர்க்கையாளர்களின் நலன், விவாகரத்து மற்றும் மத சம்பிரதாயங்களை கடை பிடிக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்களின் நலன் குறித்து ஆலோசிக்க சர்வதேச நாடுகளை சேர்ந்த பிஷப்புகள் கூட்டம் நடத்தப்பட வேண்டும்’’ என்று கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிகன் தலைமையகம், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான மேல் நடவடிக்கை குறித்து அவரது உயர் அதிகாரிகள் மேற்கொள்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் செய்தி தொடர்பாளர் பாதிரியார் பெடரிகோலம் பார்டி தெரிவித்துள்ளார்.