ஸ்பெயின் நாட்டின் பார்ஸிலோனா என்ற நகரிலிருந்து 150 பயணிகளுடன் நேற்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று ஃபிரான்ஸில் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாகவும் விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் உயிரிழந்ததாகவும் திடுக்கிடும் செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த “ஜெர்மன் விங்ஸ்’ என்ற நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-320 ரக விமானம் ஒன்று நேற்று காலை ஸ்பெயினின் பார்ஸிலோனா நகரிலிருந்து, ஜெர்மனியின் டுஸல்டாஃர்ப் நகரை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 144 பயணிகளும், இரண்டு விமானிகள் உள்பட 6 விமான ஊழியர்களும் இருந்தனர்.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் 67 பேர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் ஸ்பெயின் மற்றும் துருக்கி நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
நேற்று ஸ்பெயின் நேரப்படி 10.47 மணிக்கு (இந்திய நேரப்படி பிற்பகல் 3.17 மணி) அந்த விமானத்திலிருந்து அவசர உதவி கேட்டு அழைப்பு வந்ததை அடுத்து, அந்த விமானத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தென்கிழக்கு பிரான்ஸின் பார்ஸிலோனெட் மலைப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானம் நொறுங்கி சுக்குநூறாக இருந்ததாக் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் ஃபிரான்ஸýவா ஹொலாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த விபத்தில் எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கேஸனூவ் இது குறித்து தெரிவித்ததாவது: விமானத்தின் நொறுங்கிய பகுதிகளைக் கண்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. அந்தப் பகுதிக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர் என்றும் விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து உடனடியாகக் கூற இயலாது என்றும் அவர் கூறினார்.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலை ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் தெரிவித்தார். இந்தக் கோர விபத்து தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக அவர் கூறினார். விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட, இன்று அவர் பிரான்ஸ் செல்லத் திட்டமிட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார்.