‘கெத்து’ தமிழ் வார்த்தை இல்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

‘கெத்து’ தமிழ் வார்த்தை இல்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்
Gethu-Movie
உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன், சத்யராஜ் நடித்த ‘கெத்து’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியானது. ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் நெகட்டிவ் விமர்சனம் காரணமாக இந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் ‘கெத்து’ என்பது தமிழ்ச்சொல் அல்ல என்பதை காரணம் காட்டி தமிழக அரசு வரிவிலக்கு சலுகை அளிக்க மறுத்துவிட்டது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் உதயநிதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

திரைத் துறையில் அனுபவம் பெற்ற 4 பேரும், 3 அதிகாரிகளும் படத்தை பார்த்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தமிழ் அகராதியில், “கெத்து’ என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. தமிழ் வளர்ச்சித்துறை இயக்குர் அளித்து விளக்கத்திலும், அது தமிழ்ச் சொல் அல்ல என்று கூறியுள்ளார். காபி, மேஜை, டீ உள்ளிட்ட பிற மொழி வார்த்தைகள் தமிழிலும் பயன்படுத்தப்பட்டாலும், அவை தமிழ் வார்த்தைகள் இல்லை. “நாஸ்தா’, “பந்தா’, “கெட்டப்பு’, “கப்பு’, “அப்பீட்டு’ உள்ளிட்ட வார்த்தைகளையும் தமிழர்கள் பயன்படுத்துகின்றனர். அதுபோலத்தான், “கெத்து’ என்ற கன்னட மொழிச் சொல்லும் தமிழர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தைக்கு “மாறுபட்ட நிழல்படம், சமம்’ என்ற அர்த்தம் கூறப்படுகிறது.

திருப்புகழில் 33 பிற மொழிச் சொற்கள் உள்ளன. அனுபவம், கிருபை, சைலம் என்று பிற மொழி வார்த்தைகளும், உருது வார்த்தையான “சலாம்’ என்ற சொல்லும் இடம் பெற்றுள்ளன. எனவே, “கெத்து’ படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை வழங்காமல் நிராகரித்தது சரியானது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும். இவ்வாறு அந்த பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்றும் நடைபெறவுள்ளது.

Leave a Reply