காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வெள்ளை தோலுடன் இருந்ததால்தான் அவரை ராஜீவ் காந்தி திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு வந்ததன் காரணமும் அவரது வெள்ளை தோல்தான் என்றும், நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவரை ராஜீவ் காந்தி திருமணம் செய்திருந்தால் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகி இருக்க முடியாது என்றும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அமைச்சர் கிரிராஜ், “ராஜீவ் காந்தி என்ன நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவரையா திருமணம் செய்தார்? சோனியா காந்தியின் ‘வெள்ளைத் தோல்’ தான் அவருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை பெற்று தந்துள்ளது. சோனியா வெள்ளை நிறத்தவராக இல்லாமல் இருந்தால், அவரை காங்கிரசார் ஏற்றுக் கொண்டிருப்பார்களா? ஒருவேளை ராஜீவ் காந்தி நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்திருந்தால் விஷயம் வேறு மாதிரி இருந்திருக்கும்” என்று பேசினார்.
அமைச்சர் கிரிராஜின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு அமைச்சர் கிரிராஜின் இத்தகைய பேச்சு பாஜக வின் மனநிலை எப்படிப்பட்டது என நன்றாகக் காட்டுகிவதாகவும், அவர் தனது பேச்சிற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்” என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் பிருந்தா காரத் கூறியபோது, “கிரிராஜின் இந்த பேச்சு குறித்து பிரதமர் மோடி வெளிப்படையாக கண்டிக்கவேண்டும்.மௌனமாக இருப்பது இது போன்று இனவெருப்பைத் தூண்டும் பேச்சுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது பேச்சினால் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மனம் புண்பட்டிருந்தால், நான் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.