பீகார் மாநில தலைநகர் பாட்னா அருகே உள்ள கிராமத்தில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்த ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த 17 வயது இளம்பெண் மீது மூன்று கூர்மையான கம்பிகள் ஒரு பக்கத்தில் இருந்து குத்தி மறுபக்கமாக வெளிவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாட்னா அருகே உள்ள கிராமத்தில் நான்கு மாடி கட்டிடம் ஒன்றின் வேலை மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை அந்த கட்டிடத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த 17 வயது இளம்பெண் ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவர் விழுந்த இடத்தில் கம்பிகள் பீம் போடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சரியாக மூன்று கம்பிகளின் மேல் விழுந்த அந்த பெண்ணின் இடுப்பில் அந்த மூன்று கம்பிகளும் ஒரு பக்கத்தில் குத்தி மறுபக்கமாக வெளியே வந்தது.
இதனால் வலியால் கதறி துடித்த அந்த இளம்பெண்ணை அருகில் இருந்தவர்கள் பாட்னா மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். டாக்டர்கள் அந்த பெண்ணின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் எக்ஸ் ரே மற்றும் ஸ்கேன் எடுத்துப்பார்த்ததில் நல்லவேளையாக அந்த பெண்ணின் உடலுக்குள் இருந்த எந்த முக்கிய உறுப்புகளும் பாதிப்படையவில்லை.
பின்னர் ஐந்து மணிநேரம் சர்ஜரி செய்து மூன்று கம்பிகளையும் டாக்டர்கள் குழு வெளியே எடுத்ததனர். தற்போது அந்த இளம்பெண் நலமாக இருப்பதாகவும், இருப்பினும் அவர் ஒரு மாதத்திற்கு பூரண ஓய்வில் இருக்கவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.