ஹெல்மெட் அணிவது நேற்று முதல் கட்டாயம் ஆகியுள்ள நிலையில் முதல் நாளே ஹெல்மெட் அணிந்த கோவைப் பெண் ஒருவர் விபத்தில் உயிர் இழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிக உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் டாஸ்மாக்கை மூடாமல், ஹெல்மெட்டை கட்டாயப்படுத்தி பொதுமக்களை இம்சை படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்ற கோரிக்கைகளுடன் திடீரென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஒன்றை ஓட்டிச்சென்ற இளம்பெண் ஒருவர் சாலை விபத்து ஒன்றில் சிக்கி நேற்று பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் கோவை நகரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சனா என்ற இந்த பெண்ணுக்கு அடுத்த மாதம் இவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் லாரியின் மீது நேற்று மோதிய இவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அரசும், உயர்நீதிமன்றமும் கட்டாயப்படுத்திய ஹெல்மெட் அணிந்திருந்தும் இந்த பெண் தலையில் அடிபட்டு இறந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு கூடியிருந்த மக்கள் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
“ஹெல்மெட் அணிவதால் பின்னால் வரும் வாகனங்களை பார்க்க முடிவதில்லை என்றும் பின்னால் வரும் வாகனங்கள் ஒலிக்கும் ஹாரன் சத்தங்கள் கேட்கவில்லை என்றும் இதனால்தான் விபத்து ஏற்படுகிறது என்றும் கூறிய பொதுமக்கள் ஹெல்மெட் கட்டாயம் என்ற சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தமிழகத்தில் மிக அதிக விபத்துகள் ஏற்பட முக்கிய காரணம் டாஸ்மாக்தான். அதை மூட மறுக்கும் அரசு, ஹெல் மெட்டை கட்டாயமாக்குவது என்பது அபத்தம் ” என்ற கோரிக்கையுடன் திடீரென பொதுமக்கள் கோவையின் முக்கிய பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் நேற்று காலை சென்னை வேளச்சேரியில் நடந்த ஒரு விபத்திலும், தலைக்கவசம் அணிந்து சென்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.