மானியத்தை ஒருமுறை விட்டுக்கொடுத்துவிட்டால் மீண்டும் பெற முடியாதா? மத்திய அமைச்சர் விளக்கம்
ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை உடையவர்கள், மேலும் தங்களுக்கு மானியம் வேண்டாம் என கருதுபவர்கள் மத்திய அரசின் ‘Give it Up’ திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை விட்டுக் கொடுக்கலாம் என்றும் அவ்வாறு விட்டுக்கொடுத்தவர்கள் மீண்டும் மானியம் பெற விரும்பினால் ஒரு வருடத்திற்கு பின்னர் விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒருமுறை விட்டுக்கொடுத்துவிட்டால் பின்னர் வாழ்நாள் முழுவதும் மானியம் பெற முடியாது என்று பரவி வரும் வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவிக்கும் போது, “ஒரு முறை வேண்டாம் என்றால் அவ்வளவுதான் என்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, ஆனால் விட்டுக் கொடுத்த மானியத்தைத் திரும்பப் பெற மீண்டும் விண்ணப்பிக்கலாம். இது வரை 1.13 கோடி பேர் சமையல் எரிவாயு மானியம் வேண்டாம் என்று விட்டுக் கொடுத்துள்ளனர், இதில் 50% மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
“எங்களால் வருமான வரித் தரவுகளை அணுக முடியவில்லை. எனவேதான் ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேலாக ஆண்டு வருவாய் உடையோர் தாங்களாகவே மனமுவந்து மானியத் தொகையை விட்டுக் கொடுக்க முன் வருமாறு அரசு அழைப்பு விடுத்தது. இதன்படி 1 கோடிக்கும் மேலானோர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். மானியம் விட்டுக் கொடுப்பு திட்டத்தின் கீழ் கிடைத்த சேமிப்பினால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பிரிவில் 60 லட்சம் எல்.பி.ஜி. இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளன.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 5 கோடி எல்.பி.ஜி. இணைப்புகளுக்காக மத்திய அரசு ரூ.8,000 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் படி முதலாம் ஆண்டில் 1.5 கோடி இணைப்புகள் வழங்கப்படவுள்ளது. இந்தியா தனது 21 மில்லியன் டன் சமையல் எரிவாயு தேவையில் சுமார் 40% சமையல் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது புதிய இணைப்புகள் வழங்கும் திட்டத்தினால் இறக்குமதி அதிகரிக்கும்
இவ்வாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
தயவு செய்து இந்த செய்தியையும் படியுங்கள்
கேஸ் சிலிண்டர் மானியம் வாங்க அப்ளை செஞ்சாச்சா?