இரண்டே இரண்டு நாள் எங்களிடம் ஆட்சியை கொடுத்து பாருங்கள். முல்லை பெரியாறு பிரச்சனை உள்பட ஐந்து பிரச்சனைகலை உடனடியாக முடித்து காட்டுகின்றோம். என காங்கிரஸ் கட்சியின் கொறடா விஜயதரணி ஒரு கூட்டத்தில் பேசியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கொறடா விஜயதரணி, உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த கூட்டத்தில் பேசிய விஜயதரணி, “இங்கிருக்கும் கூட்டத்தை பார்த்து நம்ம கட்சியிலும் ஓட்டுபோட ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். சிலர் நம்ம கட்சியில வழியில்லாம இருக்காங்க. சிலர் வழியில்லாமல் போயிட்டாங்க. முதல்ல நம்ம கட்சியில நிறைய குரூப் இருந்துச்சு. அதெல்லாம் இப்போது மறைஞ்சிடுச்சு.
இதுக்கு முன்னாடி இருந்தவங்க நம்ம கட்சியை தூங்க விட்டுட்டாங்க. காமராஜர் காலத்துல பொய்யையும், புரட்டையும் சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு மூடுவிழா வச்சாங்க. அதேபோல மத்தியிலயும் ஆட்சியை கலைக்க என்னென்னமோ சொன்னாங்க.
2011 சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, ‘ரூ.23 ஆயிரம் கோடி வேண்டுமென மத்திய அரசிடம் கேட்டோம். ஆனால், அது ஒரு ஏமாற்றுகிற அரசு. மன்மோகன் மௌனியாக இருக்கிறார்’ என ஜெயலலிதா விமர்சனம் செஞ்சாங்க. ‘நீங்கள் கேட்டதைவிட ரூ.575 கோடி அதிகமான கொடுத்ததற்காக மண்டேக்சிங் அலுவாலியாவிற்கு ஜூலையில் நன்றி சொல்லிவிட்டு இங்கே இப்படி மாறி பேசுகிறீர்களே’ என நான் கேட்டேன். அந்தம்மா அசிங்கப்பட்டு தலை குனிஞ்சுட்டாங்க.
‘இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு 24 திட்டங்களுக்கு நிதியினை குறைத்துள்ளது. 8 திட்டங்களை முழுமையாக கைவிட்டுள்ளது’ என நிதி நிலை அறிக்கை வாசித்தார் ஓ.பி.எஸ். அதற்கு நான், ‘அன்னைக்கு நாங்க ஐந்தாண்டுகளுக்கும் மொத்தமாக நிதி கொடுத்தப்ப என்னென்னமோ சொன்னிங்க. இன்னிக்கு நிதி குறைச்சதுக்கு அமைதியா இருக்கீங்க. மோடி, பி.ஜே.பி மீது கண்டன தீர்மானம் போடுங்க’ன்னு சொன்னேன். உடனே என்னை அவைத்தலைவர் உட்கார சொல்லிவிட்டார்.
142 அடியாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப் பட்டத்தற்கு பாராட்டு விழா வெச்சாங்க. ஆனா, எம்.ஜி.ஆர். அணையை தாரை வார்த்தபோது, முதன்முதலா வழக்குபோட்டது நம்மளோட காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அழகுராஜா தான். இதை நான் ஜெயா டி.வி விவாதத்துலயே சொன்னேன். அவுங்களுக்கு விவாதத்தை லைவ் பண்ற தைரியம் கிடையாது. ரெக்கார்ட் பண்ணிதான் போடுவாங்க. அந்த விவாதம் முழுக்க அவுங்களுக்கு எதிராகத்தான் பேசினேன்.
காமராஜர் காலத்துல முல்லை பெரியாறு, ஈழத்தமிழர், காவிரி பிரச்னை, மீனவர் பிரச்னை, நெய்யாறு இடதுகரை பிரச்னை என எதுவுமே வந்ததில்லை. பேச்சுவார்த்தையின் மூலம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரும். இப்ப ஆட்சி செய்றவங்க இருந்தா இன்னும் நூறு வருஷமானாலும் பிரச்னை தீராது.
ஒரு சாம்பிளுக்கு தமிழகத்துல ஒரு நாள் அல்லது ரெண்டு நாள் ஆட்சியை காங்கிரஸ் கையில கொடுத்து பாருங்க. இந்த ஐந்து பிரச்னைகளையும் முடிச்சு காட்டுறோம்.
ஒரு லட்சம் கோடி கறுப்பு பண பதுக்கல் பேர்வழியான லலித் மோடியை நம்ம பிரதமர் மோடி, அருண்ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தராராஜ சிந்தியே என எல்லாரும் பாதுகாக்குறாங்க. அப்புறம் அவுங்களே கருப்பு பண தடுப்பு மசோதா கொண்டு வராங்க.
இப்ப யோகா என்ற ஒண்ண கொண்டு வந்துருக்காங்க. உடம்பு இருக்குறவங்க அதனை குறைக்க யோகா பண்ணலாம். ஆனால், இங்கே பசி யோகா, பட்டினி யோகா தான் இருக்கு. மாநிலத்துலயும் முட்டை, மின்சாரம், பால் எல்லாத்துலயும் ஊழல் நடக்குது”
இவ்வாறு விஜயதரணி பேசினார்.