சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி மேற்கூரை அல்லது கண்ணாடி ஆகியவை உடைந்து விழுவது என்பது தற்போது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் கூட நடிகர் விவேக் காமெடியாக சென்னை விமான நிலையத்திற்குள் வரும்போது ஹெல்மெட் போட்டு வருவார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்ள கண்ணாடி ஒன்று 37-வது முறையாக நேற்று உடைந்து கீழே விழுந்தது. ஏற்கனவே 36 முறைகள் கண்ணாடி உடைந்து விழுந்துள்ள நிலையில் இன்று 37வது முறையும் விழுந்துள்ளதால் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இன்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் உள்நாட்டு விமான நிலைய முனையத்தின் 3வது கதவு வழியாக காலை 11.20 மணிக்கு வருவதாக இருந்தது. இதையொட்டி மத்திய தொழிற்படை காவலர்கள் அங்கு பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், காலை 11.10 மணியளவில் 3–வது கதவு கூரை கண்ணாடி உடைந்து விழுந்தது. ஆனால் தொழிற்படை காவலர்கள் அங்கிருந்து ஓடியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் வெங்கையா நாயுடுவை உள்நாட்டு முனையத்தின் 2–வது கதவு வழியாக தொழிற்படை காவலர்கள் வெளியே அழைத்து வந்தனர்.
இந்த விபத்தில் பயணிகளுக்கோ, ஊழியர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.