இந்துக்களுக்கு எதிராக பேசினால் கரியை பூசுவோம். டிவி நிகழ்ச்சியில் ஞானியை மிரட்டிய சிவசேனா
நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்களின் மீது தாக்குதல் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் எழுத்தாளர் ஞானி, காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா, சிவசேனாவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விவாத அரங்கில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஞானியிடம் ஒரு கட்டத்தில் ஆத்திரமான சிவசேனாவின் ராதாகிருஷ்ணன், “இந்துக்களுக்கு எதிராக பேசினால் இதே அரங்கத்தில் உங்கள் முகத்தில் கரியை பூசுவோம் என்று ஞானியை மிரட்டும் தொனியில் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நேற்று நடந்த விவாத அரங்கில் சிவசேனாவின் தாக்குதல் குறித்து ஆவேசமாக பேசிய ஞானியை நோக்கி மிரட்டும் வகையில் ராதாகிருஷ்ணன் பேசியது அரங்கத்தில் இருந்தவர்கள் உள்பட அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
இந்த சம்பவம் குறித்து ஞானி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியபோது, “சிவசேனை, பாரதிய ஜனதா, இதர இந்துத்துவ இயக்கப் பேச்சாளர்களுடன் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க இனி செல்வதாயிருந்தால்,அழைக்கும் தொலைகாட்சி நிறுவனங்கள் போதுமான பாதுகாப்பு அளித்தால்தான் வர இயலும்” என கூறியுள்ளார்.