ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. அவ்வப்போது ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்து வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ‘சந்திரசேகர ராவை தெலுங்கு தேச கட்சிதான் ஆரம்பத்தில் அரவணைத்து ஆதரவு கொடுத்தது. நாங்கள் மட்டும் ஆதரவு கொடுக்காவிட்டால் அவர் தற்போது ஆடு மேய்த்துக்கொண்டு தான் இருப்பார்’ என கூறியுள்ளார்.
சந்திரபாபுநாயுடுவின் பேட்டி தெலுங்கானா மாநில யாதவ சமூகத்தினர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு கண்டனம் தெரிவித்ததோடு ஆடு மேய்ப்பது என்ன கேவலமான தொழிலா? என கேள்வி விடுத்துள்ளனர்
மேலும் சந்திரபாபு நாயுடுவை கண்டித்து மெடக் மாவட்டம் மனோகராபாத் என்ற பகுதியில் யாதவ மகாசபை துணைத் தலைவர் மல்லேஸ்யாதவ் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் தங்கள் ஆடுகளுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டு சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.