மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது.
முன்னதாக மதுரையின் ராணியாக மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் சூடிக்கொண்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பட்டாபிஷேக நிகழ்ச்சியை தொடர்ந்து அரசி மீனாட்சி 8 திசைகளுக்கும் சென்று தேவர்களை வென்று, முடிவில் சிவபெருமானான சுந்தரேஸ்வரனிடம் சரணடையும் திக்விஜயம் நிகழ்ச்சியும் நடத்திக்காட்டப்பட்டது. அதன் பின் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருமணம் முடிவு செய்யப்படுவதாக புராணம் கூறுகிறது.
நேற்று அதிகாலையிலிருந்து திருகல்யாணத்தை பார்க்க பக்தர்கள் மேற்குஆடி வீதி மற்றும், வடக்கு ஆடி வீதிகளில் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். பக்தர்களின் வசதியை முன்னிட்டு மீனாட்சி கோயில் நிர்வாகம் ரூ.30 லட்சம் செலவில் கூரைப்பந்தல் அமைத்தும், ஏசி வசதியும் செய்து பக்தர்களை வெயிலின் வெப்பத்தில் இருந்து பாதுகாத்தனர்.
பக்தர்களுக்கு பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் முதலியவற்றை சில உள்ளூர் பிரபல நிறுவனங்கள் கொடுத்தனர். காலை நான்கு மணிக்கு மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்தனர். பிறகு முத்துராமையர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடினர். பிறகு திருக்கல்யாண மண்டபத்தில் காட்சியளித்தனர்.
பல வண்ண வண்ண பட்டுகள் சூடி மலர் மாலைகள் அணிவித்து சடங்குகள் நடத்தப்பட்டு சரியாக 1.45 மணிக்கு மீனாட்சியின் கழுத்தில் சுந்தரேஸ்வரர் தாலி கட்டினார். இதை பார்த்ததும் அங்கு கூடியிருந்த பெண்கள் தங்கள் கழுத்துகளில் புது தாலி அணிந்தனர். இதற்காக முப்பதாயிரம் தாலிகள் கோயில் நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்பட்டது.
திருமணம் முடிந்த மீனாட்சி – சுந்தரேஸ்வரர், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மதுரை நகர மக்கள் அனைவரும் தங்கள் வீட்டு திருமணம் போல இதை கொண்டாடி வருகிறார்கள்.