இந்தியா செய்த மிகப்பெரிய தவறு இதுதான். மார்கண்டேய கட்ஜு
குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாடியது பெரும் தவறு என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறப்பட்டு பிடிபட்ட குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவச் சட்டப் பிரிவு 59-ன் கீழும் அதிகாரபூர்வ ரகசியச் சட்டம் 1923-ன் கீழும் குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய திட்டமிட்டது. அதன்படி, நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில், இந்திய அரசு சார்பில் கடந்த 8-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தின் விசாரணைக் கடந்த 15-ம் தேதி தொடங்கியது.
வழக்கு விசாரணை இரண்டு நாள்களுக்கு நடத்திய சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்த விஷயம் குறித்து இறுதி முடிவு எடுக்கும்வரை, எந்தவித நடவடிக்கையும் பாகிஸ்தான் எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்து வரும் நிலையில், குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாடியது பெரும் தவறு என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
இது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என குறிப்பிட்டுள்ள கட்ஜு, இதன்மூலம் பாகிஸ்தான் பல்வேறு பிரச்னையை சர்வதேச நீதிமன்றத்தில் எழுப்ப இந்தியா வழிவகை செய்து கொடுத்துள்ளது. இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியதில் பாகிஸ்தான் அதிக எதிர்ப்பு தெரிவிக்காததற்கு இதுவே உண்மையான காரணம். இதனால், பாகிஸ்தான் மகிழ்ச்சி அடையும். காஷ்மீர் விவகாரம் உள்பட பிற பிரச்னைகளை பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் எனவும் கூறியுள்ளார்.