தங்கம் விலை கடந்த 10 நாட்களில் பவுனுக்கு ஆயிரம் ரூபாய்க்குமேல் குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் ரூ.280 குறைந்து ஒரு பவுன் ரூ.19,376-க்கு விற்கப்பட்டது. இதனால், நகை வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சென்னையில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாகவே இருந்து வருகிறது. கடந்த 2012 நவம்பரில் ஒரு பவுன் சுமார் ரூ.25 ஆயிரத்தை தொட்டது. அதன்பிறகு அவ்வப்போது விலை குறைவதும் அதிகரிப்பதுமாக உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பவுன் ரூ.22 ஆயிரம் என்ற அளவில் விற்கப்பட்டது. அதன்பிறகு மெல்ல மெல்ல விலை குறைந்து கடந்த அக்டோபர் 25-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.20,544-க்கு (கிராம் ரூ.2,565) விற்பனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 10 நாட்களாக தங்கம் விலை குறைந்துகொண்டே வருகிறது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.280 குறைந்து ஒரு பவுன் ரூ.19,376-க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2,457 ஆகவும், பவுன் ரூ.19,656 ஆகவும் இருந்தது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,168-ம்,10 மாதங்களில் ரூ.2,400 வரையும் குறைந்துள்ளது.
தங்கம் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெண்கள் நகை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் சென்னையில் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் நிரம்பிவழிகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருப்பதற்கான காரணங்கள் குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.வசந்தகுமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
உலக அளவில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தங்கத்தில் பணத்தை முதலீடு செய்வதை தவிர்த்து, ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த தங்கத்தை, வேகமாக விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் குறைந்துள்ளது.
மேலும், வெளிநாட்டு மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைத் தவிர்த்து, பங்குச் சந்தை பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். இதுவும் தங்கத்தின் மதிப்பு குறைந்ததற்கு ஒரு காரணம்.
நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு கிராம் தங்கம் ரூ.2,500-க்கும் குறைவாக ரூ.2422-க்கு விற்கப்படுகிறது. நகை வாங்க விரும்புவோருக்கு இது நல்ல தருணம். நகை வாங்கும் திட்டத்தை தள்ளிப் போட்டவர்கள், விலை குறைவால் உடனடியாக வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால், சென்னையில் உள்ள நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த 10 நாட்களில் பவுனுக்கு ஆயிரம் ரூபாய்க்குமேல் விலை குறைந்திருக்கிறது. விலை குறைவால் விற்பனை பெருமளவு அதிகரித் துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.