இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் திருச்சி கலால் மற்றும் சுங்கத்துறை அலுவகத்தில் 12 கிலோ தங்கம் திருட்டு போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. திருடு போன தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என கூறப்படுகிறது. திருச்சி காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விமான நிலையம் மற்றும் கடத்தல்காரர்களிடம் இருந்து பிடிபட்ட தங்கங்கள் திருச்சியில் உள்ள கலால் மற்றும் சுங்கத்துறை அலுவலகத்தில் இருக்கும் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று திருச்சி விமான நிலையத்தில் 7 கிலோ தங்கத்தை கடத்திய ஒருவரை பிடித்து அவரிடம் இருந்த தங்கத்தை சுங்கத்துறை இலாகா துறையினர் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட தங்கத்தை பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்க வெங்கடேசன் என்ற சுங்கத்துறை அதிகாரி சென்றபோது அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஏற்கனவே பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தை அவர் சரி பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 14.5 கிலோ தங்கம் குறைவதை உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, இதுகுறித்து சுங்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்னர் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.
புகாரை பெற்றுக் கொண்ட திருச்சி கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள், காணாமல் போன தங்கம் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு பெட்டகத்தில் பல கோடி மதிப்பில் தங்கம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே திருடு போயிருப்பதால் பல்வேறு சந்தேகங்களை பொதுமக்கள் மத்தியில் எழுப்பி உள்ளது.