15.5 கிலோ தங்க நகைகள் அணிந்த முற்றும் துறந்த முனிவர். உ.பியில் பரபரப்பு
ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ராமலிங்க அடிகள், பட்டினத்தார், ஷிருடி சாய்பாபா போன்ற துறவிகள் எந்தவித ஆசையும் இல்லாமல், ஆடம்பரம் இல்லாமல் உண்மையான பக்தர்களின் தொண்டர்களாக வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது உள்ள ஒரு சில துறவிகள், தங்களை முற்றும் துறந்தவர் என்று கூறிக்கொண்டு கிலோகணக்கில் தங்க நகைகளை அணிந்தும், ஆடம்பர பங்களாவில் வாழ்ந்து கொண்டும் உள்ளனர். அந்த வரிசையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு துறவி சுமார் 15.5 கிலோ தங்க நகைகளை அணிந்து கொண்டு ஹரித்துவாரில் நடந்து வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
பத்து விரல்களிலும் தங்க மோதிரங்கள், கழுத்தில் கொத்து கொத்தாக தங்க சங்கிலிகள். மேலும், வைரங்களால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கை கடிகாரம் ஆகியவை உள்பட உடல் முழுவதிலும் சுமார் 15.5 கிலோ தங்க நகைகளுடன் அந்த துறவி கும்பமேளாவில் கலந்து கொண்டார். அவர் அணிந்திருக்கும் நகைகளின் மொத்த மதிப்பு மட்டும் ரூ.3 கோடி என்று கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தங்க நகைகளை அணிந்தபடியே கங்கையில் புனித நீராடிய அந்த சாதுவை மக்கள் ஆச்சரியமுடன் பார்த்தனர். அவரை தங்க பாபா என்றே அழைக்க தொடங்கி விட்டனர்.
இதுகுறித்து அவரது சீடர்கள் கூறும்போது, ‘‘உலகில் மிக மதிப்புள்ள, விலை உயர்ந்த பொருள் தங்கம். எங்களது குருவும் தங்கம் போன்ற மதிப்புள்ளவர்’ என்று கூறினர்
அந்த சாதுவின் உண்மையான பெயர் சுதிர்குமார் மக்கட். வயது 53. டெல்லியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். திடீரென சந்நியாச வாழ்க்கைக்கு வந்து விட்டார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, ‘‘வியாபாரத்தில் நான் பல பாவங்களை செய்திருக்கிறேன். அதற்கு பரிகாரம் தேடவே நான் துறவு வாழ்க்கைக்கு வந்து விட்டேன். இப்போது ஏழைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். குறிப்பாக ஏழை பெற்றோர் தங்கள் பெண் குழந்தையை திருமணம் செய்து வைக்க உதவுகிறேன். தவிர வேறு பல சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறேன்’’ என்கிறார் சாது சுதிர்குமார். கோடிக்கணக்கான மதிப்பில் நகை அணிந்து ஒரு துறவி கும்பமேளாவில் கலந்து கொண்டது உ.பி. மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.