ஆப்பிள் நிறுவனத்துக்கு ஆதரவு கொடுத்த கூகுள் சுந்தர்பிச்சை
எந்தவொரு ஐ-போனையும் ‘ஹேக்கிங்’ செய்து தகவல்களைப் பெறும் தொழில்நுட்பத்தை அளிக்க வேண்டும் என FBI விடுத்த கோரிக்கைக்கு ஆப்பிள் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆதரவாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாதியும் அவரது மனைவியும் கண்மூடித்தனமாக பொதுமக்களை நோக்கி சுட்ட சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர். அந்த தீவிரவாதி பயன்படுத்திய ஐபோனை ஹேக்கிங் செய்து முக்கிய தகவல்களைப் பெற முடிவு செய்த FBI, ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை கோரியது. தீவிரவாதியின் ரகசியங்களை கண்டுபிடிக்கும் நோக்கத்திற்காக ஆப்பிள் நிறுவனம் இதற்கு முழுஒத்துழைப்பு அளித்தது.
ஆனால் அனைத்து ஐ-போன்களையும் ‘ஹேக்கிங்’ செய்து தகவல்களைப் பெறும் தொழில்நுட்பத்தை அளிக்க வேண்டும் என FBI ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தது. இதற்கு ஆப்பிள் நிறுவனம் மறுத்துவிட்டது. தங்களது வாடிக்கையாளரின் அந்தரங்கத்தை இது பாதிப்பதோடு வர்த்தகமும் பாதிக்கும் என்று ஆப்பிள் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த கருத்துக்கு கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பாதுகாக்க பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை செல்போன்களில் புகுத்தி வருகிறோம். குற்ற சம்பவங்களின் போது போலீஸாரின் விசாரணைக்கு செல்போன் நிறுவனங்கள் முழுஒத்துழைப்பு அளிக்கின்றன. ஆனால் செல்போனை ‘ஹேக்கிங்’ செய்து தகவல்களைப் பெறும் நடவடிக்கை பெரும் குழப்பங்களை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படுவோம் என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தால் தற்போது அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Chennai Today News: Google CEO Sundar Pichai Says Government Request for Apple Back Door Could Set ‘Troubling Precedent’