2014-ம் ஆண்டில் இந்தியர்கள் கூகுள் சர்ச் இஞ்சினில் மிக அதிகமாக தேடிய வார்த்தைகள் குறித்த பட்டியல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி முதலிடத்தை பெற்றுள்ளது. ரயில் டிக்கெட்டுக்களை முன்பதிவுக்காக அதிகளவில் இந்த இணையதளத்தை பொதுமக்கள் இந்த ஆண்டு பயன்படுத்தியுள்ளனர்.
ஐ.ஆர்.சி.டி.சியை அடுத்து இணையதளம் மூலம் பொருட்களை விற்கும் பிளிப்கார்ட் இணையதளம் இரண்டாவது இடத்தையும், எஸ்பிஐ ஆன்லைன் மூன்றாவது இடத்தை யும், ஸ்னாப்டீல், பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் ஆகியவை முறையே 4,5 வது இடத்தையும் பிடித்துள்ளன. எச்டிஎப்சி நெட்பேங்கிங் 6-வது இடத்தை கைப்பற்றியுள்ளது.
2014-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தற்கால நிகழ்வுகள் வரிசையில் இந்திய மக்களவைத் தேர்தல் 2014, பிபா உலகக் கோப்பை கால்பந்து 2014, ஐபோன் 6, கேட் தேர்வு 2015, நரேந்திர மோடியின் பெயர் ஆகியவை முறையே முதல் 5 இடங்களை பெற்றுள்ளன.
மேலும் கூகுளில் பிரபலமான தனிநபர்களை தேடிய பட்டியலில் கனடா நாட்டில் ஆபாச படங்களில் நடித்து பாலிவுட்டில் கொடி கட்டி பறக்கும் சன்னினி லியோன் முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மிக அதிகமாக தேடப்பட்ட திரைப்படங்கள் பட்டியலிலும் சன்னி லியோன் நடித்த ராகிணி எம்எம்எஸ்-2 திரைப்படம் முதலிடத்தை கைப்பற்றியுளது. அதிகம் தேடப்பட்ட பாலிவுட் நடிகர்களில் சல்மான் கானும், நடிகைகளில் காத்ரீனா கைப்பும் முதல் இடம் பிடித்துள்ளனர்.
அதிகம் தேடப்பட்ட செல்போன்களில் மோட்டோ ஜி முதலிடத்திலும், ஆப்பிள் ஐபோன் 6, 2-வது இடத்திலும் உள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 5, மோட்டோ இ, நோக்கியா எக்ஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.