வைஃபை, VR ஹெட்செட், ஸ்மார்ட் ஹோம் அசிஸ்டன்ட்..கூகுளின் பிக்ஸல் ஸ்மார்ட் போன் எப்படி இருக்கிறது? #GooglePixel

வைஃபை, VR ஹெட்செட், ஸ்மார்ட் ஹோம் அசிஸ்டன்ட்..கூகுளின் பிக்ஸல் ஸ்மார்ட் போன் எப்படி இருக்கிறது? #GooglePixel

1வானிலை போலவே, டெக்னாலஜி உலகமும் நிலையானது கிடையாது. அதற்கேற்ப நேற்று கூகுள் புதிய அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கூகுள் நிறுவனம் தங்களின் புதிய ஸ்மார்ட்போன்களான பிக்சல் மற்றும் பிக்சல் XL, புதிய Google Home என்னும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் , கூகுள் அசிஸ்டன்ட், புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், WiFi ரௌட்டர் மற்றும் புதிய கிரோம்காஸ்ட் அல்ட்ரா என்னும் ஆடியோ, வீடியோ டாங்கில்என டெக் மார்க்கெட்டில் புதிய போட்டியாளர்களை களமிறக்கியுள்ளது சமீபத்தில் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடிய கூகுள்.

நிகழ்ச்சியில் முதலில் பேசிய, கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, உலக மக்களிடையே எப்படி எவ்வித வேறுபாடும் இல்லாமல் கூகுளின் தேடுபொறி இயந்திரம் பயன்படுகிறதோ அதேபோன்று வருங்காலத்தின் தவிர்க்கமுடியாத இணைப்பான ஸ்மார்ட்போன் மற்றும் பர்சனல் வாய்ஸ் அசிஸ்டெண்ட்டிலும் கூகுள் முன்னிலை வகிப்பதற்கான பல முன்னோடித் திட்டங்கள் செயற்படுத்தப்படவிருப்பதாக தெரிவித்தார். சுமார் 100 நிமிடங்கள் நடந்த இந்நிகழ்ச்சியில் ஒன்றன் பின்னொன்றாக பல அறிவிப்புகள் கூகுளின் தொழில்நுட்ப வல்லுநர்களால் வெளியிடப்பட்டன. அவற்றின் அறிமுகங்கள் இங்கே..

1. பிக்சல் மற்றும் பிக்சல் XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள்:

டிஸ்ப்ளே:

பிக்ஸல் 5” அங்குல 1080p டிஸ்ப்ளேவும் மற்றும் 1920×1080 ரெசல்யூஷன் கொண்டது.

பிக்ஸல் XL மாடல் 5.5” அங்குல Quad-HD டிஸ்ப்ளேயுடனும் 2560×1440 ரெசலுஷன் கொண்டது.

எடை:

பிக்ஸல் 140 கிராம் எடையும் பிக்சல் XL 168 கிராம் எடையும் கொண்டுள்ளது.

புராசஸர்:

பிக்ஸல் மற்றும் பிக்சல் XL ஆகிய இரண்டும் 4 ஜிபி ரேம் நினைவகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Qualcomm நிறுவனத்தின் அதிவேகமான புதிய புராசஸரான Snapdragon 821 சிப்கள் இந்த இரண்டு மாடல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன.

கேமரா:

பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL ஆகிய இரண்டும் 12.3 மெகாபிக்சல் பின்பக்க கேமராவும், 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொபைல் கேமராக்களிலேயே இந்த பிக்ஸல் போன்களே சிறந்தது என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

பேட்டரி:

பிக்ஸல் 2770 mAH பேட்டரி திறனும், பிக்சல் XL 3450 mAH திறனும் கொண்டுள்ளது. இந்த இரண்டு மொபைல்களும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 7 மணிநேரங்கள் பயன்படுத்தலாம் என்கிறது கூகுள்.

நிறம்:

இந்த இரண்டு போன்களும் வெரி சில்வர், ரியல்லி ப்ளூ, கொய்ட் பிளாக் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கூகுள் அசிஸ்டன்ட்:

கூகுளின் பிரத்யேகமான பர்சனல் வாய்ஸ் அசிஸ்டன்ட் முதல்முறையாக இந்த மொபைல்களுடன் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது.

ஆடியோ:

ஹெட்போன் ஜாக்கை எடுத்து வாடிக்கையாளர்களின் எதிர்ப்பை வாங்கிக்கொண்ட ஆப்பிள் நிறுவனம் செய்த தவறை கூகுள் செய்யவில்லை. ஆம் இந்த இரண்டு மொபைல்களிலும் 3.5mm ஹெட்போன் ஜாக் வழக்கம்போலவே உள்ளது.

பாதுகாப்பு :

மொபைல்போன்களின் தகவல் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமாகிவிட்ட இக்காலத்தில் இந்த இரண்டு மொபைல்களுமே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் வசதியை கொண்டுள்ளது.

சலுகைகள்:

பிக்ஸல் மற்றும் பிக்சல் XL ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு அளவில்லாமல் தாங்கள் எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை மேகக்கணினியில் (கிளவுட்) இலவசமாக சேமித்துக்கொள்ளலாம். மேலும் 24X7 நேரமும் தொழில்நுட்ப உதவியை போன் மற்றும் மெசேஜ் மூலமாக பெற முடியும்.

எப்போது இந்தியாவில் கிடைக்கும்?

பிக்ஸல் மற்றும் பிக்சல் XL ஆகிய இரண்டு மாடல்களுக்கான முன்பதிவு இந்தியாவில் இம்மாதம் 13-ம் தேதி தொடங்குகிறது. 32GB, 128GB நினைவகம் உடைய பிக்சலின் தொடக்க விலையாக 649 டாலர்களும், அதே 32GB, 128GB நினைவகம் உடைய பிக்சல் XL 769 டாலர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்ஸல் போனின் விலை சுமார் 43,000-த்தில் இருந்து துவங்குகிறது.

2. புதிய VR ஹெட்செட்:

சினிமா, பொழுதுப்போக்கு, விளையாட்டு, செய்திகள் போன்றவற்றின் எதிர்காலமாக கருதப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை மொபைல்போனில் காண உதவும் புதிய “Daydream” VR ஹெட்செட்டை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL மொபைல்களுக்கு மிகவும் ஏற்றதாக இதை தெரிவித்துள்ள கூகுள் இதை வாங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது. இதன் தொடக்க விலையாக $79 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது.

3. Google Home :

உங்கள் வீட்டிலுள்ள ஸ்மார்ட் பொருட்கள் மற்றும் சாதனங்களை வெறும் பேச்சின் மூலம் இயக்கும் இந்த கூகுள் ஹோம் என்னும் ஸ்மார்ட் ஹோம் அசிஸ்டன்ட்டில் பல புதிய சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. உங்களின் பயணத்திட்டங்கள் குறித்தும், வானிலை நிலவரம், செய்திகள், போக்குவரத்து நிலைமை போன்ற பல்வேறு தகவல்களை கேட்டவுடன் உடனடியாக இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் தரும். 6 மாத இலவச யூடுப் ரெட் சந்தாவுடன் கூடிய இது வரும் நவம்பர் மாதம் முதல் $129 மற்றும் $299 விலையில் கிடைக்கும்.

4. Google WiFi:

இதற்கு முன்பு மற்ற முன்னணி வைஃபை ரௌட்டர் நிறுவனங்களுடன் இணைத்து பணியாற்றிய கூகுள், முதல் முறையாக தனது பெயரில் இதை வெளியிட்டுள்ளது. நிலையான இணைய வேகம், அதிக கவரேஜ் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ரௌட்டரை கூகுள் வெளியிட்டுள்ளது. உங்கள் வைஃபை இணைப்பை பயன்படுத்துபவரின் பயன்பாட்டை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும். இது வரும் நவம்பர் மாதம் முதல் $129 மற்றும் $299 விலையில் கிடைக்கும்.

5. Chromecast Ultra:

உங்களின் மொபைல் மற்றும் டேப்லெட்டுகளை இந்த கூகுள் கிரோம்காஸ்ட் அல்ட்ராவுடன் இணைப்பதன் மூலம் உங்களின் டிவியில் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை ப்ளே செய்யமுடியும். மேலும் கூகுள் பிரத்யேகமான யூடுப் சேவைகளையும், Netflix, Vudu-வின் சேவைகளை 4K தரத்தில் காணவியலும். முந்தைய பதிப்பை விட 1.8 மடங்கு வேகமானது என்று குறிப்பிட்டுள்ள கூகுள் இது $69 விலையில் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.

ஆப்பிளுடன் போட்டி போடுகிறதா கூகுள்?

இதுவரை மென்பொருள் துறையில் மட்டுமே நேரடியாக கவனம் செலுத்தி வந்த கூகுள் நிறுவனம், முதல் முறையாக ஹார்டுவேர் என்னும் வன்பொருள் துறையிலும் தனது ஆதிக்கத்தை நேரடியாக செலுத்த தொடங்கியுள்ளது. மென்பொருள் மற்றும் வன்பொருள் ஆகிய இரண்டையும் தானே தயாரித்து வெளிடுவதாலே ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தனி மதிப்பும் நம்பகத்தன்மையும் மற்ற நிறுவன தயாரிப்புகளோடு அதிகமாக இருந்தது. தற்போது இந்த வரிசையில் கூகுளும் இணைத்துள்ளதால் இனி போட்டிக்கு பஞ்சமிருக்காது!

Leave a Reply