வெள்ளம் வருவதை முன்கூட்டியே அறியும் புதிய வசதியை அறிமுகம் செய்கிறது கூகுள்
சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் செம்பரப்பாக்கம் ஏரியை முன் அறிவிப்பு இல்லாமல் அதிகளவு திறந்துவிட்டதே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் உண்மை நிலை என்ன என்று தெரியாமல் பொதுமக்கள் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளில் எந்த ஆற்றில் எவ்வளவு தண்ணிர் இருக்கின்றது, எங்கேங்கே வெள்ள அபாயம் இருக்கின்றது என்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் செய்து கொடுத்துள்ளது.
இதன் மூலம், இந்தியாவில் ஓடும் அனைத்து ஆறுகளின் நீர்மட்டத்தையும் பொதுமக்கள் உடனுக்குடன் தங்களது மொபைலில் இருந்தே அறிந்து கொள்ள இயலும். நாடு முழுவதும் உள்ள ஆறுகளின் நீர்மட்டத்தை அறிய உதவும் இந்த வெள்ள அபாய எச்சரிக்கை மூலம், ஆறுகள் அபாய கட்டத்தை தாண்டுவதை முன்கூட்டியே அறிந்து அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இந்திய வெள்ள முன்னறிவுப்பு மையத்துடன் இணைந்து கூகுள் செயல்படுத்த உள்ள இந்த சேவையின் மூலம் நாட்டில் 170 இடங்களில் ஓடும் ஆற்றின் நீர்மட்டம் குறித்து உடனடியாக அறிந்து கொள்ள முடியும். மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தால் கண்காணிக்கப்படும் இந்த நிலவரங்களை இனி கூகுள் மூலமாக பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும்.
கூகுள் நௌ கார்ட்ஸ், கூகுள் மேப்ஸ், கூகுள் பப்ளிக் அலர்ட்ஸ் ஆகியவற்றில் இந்த சேவை கிடைக்கும். பேரிடரின் போது, உரிய நேரத்தில் மக்களுக்கு எச்சரிக்கை செய்தி சென்றடைய வேண்டியதுதான் மிகவும் அவசியமானது. அதன் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று கூகுள் உற்பத்தி மேலாளர் பாயல் பட்டேல் கூறியுள்ளார்.
Chennai Today News: Google to offer flood alerts for India