மதுரையில் மாயமான அரசு பேருந்து. பெரும் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் இராஜபாளைத்திலிருந்து புறபட்ட அரசுப் பேருந்து ஒன்று நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்தடைந்தது. அங்கு பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஓய்வு எடுக்க சென்றுவிட்டனர். இன்று அதிகாலை 4 மணிக்கு மீண்டும் பேருந்தை இயக்க இருவரும் வந்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பேருந்து நிறுத்தப்பட்ட இடத்தில் இல்லை.
உடனடியாக பேருந்து நிலையம் முழுவதும் இருவரும் தேடி பார்த்ததில் பேருந்து எங்கும் காணவில்லை. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தை தேடும் பணி மதுரை மாவட்டம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டது.
இந்நிலையில் மாயமான பேருந்து சிவகங்கை அருகே திருமாஞ்சோலை என்ற இடத்தில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுத்திய இந்த பேருந்து எப்படி இங்கு வந்தது என்பது மர்மமாகவே உள்ளது. இதுகுறித்து மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து கடத்தப்பட்டதா? அல்லது வேறு டிரைவர் தெரியாமல் எடுத்து கொண்டு சென்றுவிட்டாரா? என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.