தனியார் நிறுவனமான நெஸ்ட்லேவின் மேகி நூடுல்ஸ், நெஸ்ட்லே பால்பவுடர், செர்லாக், மற்றும் காம்ப்ளான் ஆகிய உணவுப்பொருட்களுக்கு சமீபத்தில் சர்ச்சை ஏற்ப்ட்டது என்பது நாடே அறிந்ததுதான். இந்நிலையில் அரசு நிறுவனமான ஆவின் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வரும் ஒரு பொருள் மீதும் தற்போது புகார் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் ஆவின் பால்பேடாவில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி என எதுவும் இல்லாமல், மோசமான தரத்தில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் புஸ்பானந்தம் என்பவர் இது தொடர்பாக கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத் துறையிடம் ஆவின் நிறுவனம் மீது புகார் தெரிவித்துள்ளார்
கோவை, இடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் புஸ்பானந்தம். இவர் சமீபத்தில் தடாகம் ரோட்டில் உள்ள ஆவின் பால் பூத்தில் பால் பேடா ஒன்றை வாங்கியிருக்கிறார். வீட்டுக்கு சென்று சாப்பிட்ட போது, அதன் சுவை புளிப்பாக இருந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து பால்பேடாவின் தரமும் மோசமானதாக இருந்ததை உணர்ந்த புஸ்பானந்தம், அதன் காலாவதி தேதியை பார்த்த போது, அதில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி என எதுவுமே இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து ஆவின் கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கவும், கோவை மாவட்டத்தில் விற்பனையாகும் பால் பேடாவை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றும் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக புஸ்பானந்தம் கூறுகையில், “நேற்று இரவு தடாகம் ரோட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் ரூ.40க்கு பால்கோவா வாங்கினேன். வீட்டுக்கு வந்து சாப்பிட்ட போது ரொம்ப மோசமா இருந்துச்சு. இனிப்புக்கு பதிலா புளிச்சது. அதனால சாப்பிடாம அப்படியே வைச்சுட்டு, பாக்கெட்டுல காலாவதி தேதியை சரிபார்த்தேன். ஆனா அதுல விலை, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி என எதுவுமே இல்லை. எனவே, இதை உடனே தடை செய்யணும். இதை விற்பனை செய்த கடை நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கணும்” என்றார்.
ஆனால், இந்த புகார் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அரசு நிறுவனமான ஆவின் மீதான புகார் என்பதால், இந்த புகார் மீது அடிப்படையான நடவடிக்கைகளை கூட அதிகாரிகள் எடுப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.
ஆவின் நிறுவன பொருளை எப்படி ஆய்வுக்குட்படுத்துவது? ஆவின் கடையில் எப்படி ஆய்வு நடத்துவது என தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.