ஜனவரி 5முதல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஆரம்பம். தமிழக அரசு ரூ.2 கோடி நிதியுதவி.

chennai oprn -PTIசென்னையில் ஜனவரி 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு தமிழக அரசு 2 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தினை 4 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புனரமைத்திட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 15.10.2013 அன்று ஆணை வழங்கினார்.

அதனடிப்படையில் சென்னை, நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கத்தில் அனைத்து புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, தற்போது இந்த டென்னிஸ் விளையாட்டு அரங்கம் உலகத்தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கத்தில் தான் ‘சென்னை ஓபன் டென்னிஸ் 2015’ வரும் ஜனவரி 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சென்னை மாநகருக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் நடைபெறவுள்ள இந்த ‘சென்னை ஓபன் டென்னிஸ் 2015’ சீருடனும் சிறப்புடனும் நடைபெறும் பொருட்டு, ஜெயலலிதா ஏற்கனவே ஆணையிட்டதன் அடிப்படையில் தற்போது தமிழ்நாடு அரசு தன் பங்களிப்பாக 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

இதன்மூலம், தமிழ்நாட்டில் இளைஞர்களிடையேயும் டென்னிஸ் ஆர்வலர்களிடையேயும் டென்னிஸ் விளையாட்டினை மேலும் பிரபலம் அடையச் செய்து அதன்மூலம் இம்மாநிலத்திலிருந்து அதிகப்படியான வீரர்கள் இவ்விளையாட்டில் ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்று விளையாடி வெற்றி கண்டு உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் புகழ் தேடித்தர வாய்ப்பு உருவாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply