பொதுத் துறை வங்கிகளில் 49% அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு ஆலோசனை

bank-kVBC--621x414@LiveMint

பொதுத் துறை வங்கிகளில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 49 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
 இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் புது தில்லியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: பொதுத் துறை வங்கிகளில் தற்போது அன்னிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பு 20 சதவீதமாகும். வங்கித் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் வகையில், இந்த உச்சவரம்பை 49 சதவீதமாக உயர்த்த நிதி அமைச்சம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனை ஏற்கப்பட்டால், இது தொடர்பான அறிவிப்பு வரும் மத்திய பட்ஜெட்டில் வெளியாகும்.
 அதைத் தொடர்ந்து பொதுத் துறை வங்கிகள் தொடர்பான பல்வேறு சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டியிருக்கும்.
 தற்போது, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று 20% வரை பொதுத் துறை வங்கியில் அன்னிய நேரடி முதலீடு பெறலாம்.
 “இந்திரதனுஷ்’ திட்டத்தின் கீழ், அடுத்த 4 ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளில் ரூ.70,000 கோடி கூடுதல் முதலீட்டை மத்திய அரசு செலுத்தவிருக்கிறது. வங்கி செயல்பாடு தொடர்பான சர்வதேச பேஸல்-3 விதிமுறைகளைப் பின்பற்றும் விதமாக, அரசு வங்கிகள் அதனளவில் ரூ. 1.1 லட்சம் கோடி கூடுதல் மூலதனத்தை திரட்ட வேண்டும். இந்த நிலையில், அன்னிய நேரடி முதலீடு வழியாக கூடுதல் மூலதனம் திரட்டும் ஆலோசனை முன்வைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
 கூடுதல் மூலதனம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டில் ரூ. 25,000 கோடி வழங்கப்பட உள்ளது. இது வரை, 13 அரசு வங்கிகளில் ரூ. 20,088 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
 தனியார் துறை வங்கியில் அன்னிய நேரடி தொடர்பான விதிமுறைகள் கடந்த ஆண்டு தளர்த்தப்பட்டன. வெளிநாட்டு முதலீட்டு அளவு 74 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதற்கு முன்னர் தனியார் வங்கிகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பு 49 சதவீதமாக இருந்தது.

Leave a Reply