முதன்முதலாக அவதூறு வழக்கை தாக்கல் செய்த தமிழக கவர்னர்.
இதுவரை அரசியல் கட்சி தலைவர்கள்தான் ஒருவர் மீது ஒருவர் அவதூறு வழக்கு போடுவார்கள். இந்த அவதூறு வழக்குகளில் பெரும்பாலும் முடிவு தெரியாமல் நிலுவையில்தான் உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு செயல்படும் கவர்னரும் ஒரு அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவர்தான் நமது தமிழக கவர்னர் ரோசையா.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனியார் தொகைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘கவர்னர் முதல்வரின் எடுபிடி போல செயல்படுவதாகவும், துணைவேந்தர் நியமனத்தில் லஞ்சம் பெறுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து தமிழக ஆளுநர் சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: “ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த 30.4.16 அன்று தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், துணைவேந்தர் நியமனத்தில் ரூ.15 கோடி பெறுவதாகவும், தமிழக முதல்வரின் எடுபிடி போல செயல்படுவதாகவும் ஆளுநர் மீது அவதூறு குற்றச்சாட்டு கூறியுள்ளார். எனவே அவர் மீது அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
கவர்னர் சார்பில் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொடருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.