தமிழகத்தில் முதல்வரோ அல்லது அமைச்சர்களோ ஒரு விழாவுக்கு வருகின்றார்கள் என்றார் போக்குவரத்தை நிறுத்தி சாதாரண குடிமகனை மணிக்கணக்கில் நடுரோட்டில் காக்க வைப்பது என்பது சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சி. ஆனால் முதல்வர், அமைச்சர்களை போல தற்போது கவர்னர் வரும்போதும் இதே கூத்து நடைபெறுவதை அறிந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று தமிழக கவர்னர் ரோசையா, திருச்சி ஸ்ரீரங்கம் ஜியரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு ஆசி வாங்க வந்திருந்தார். கவர்னரின் வருகைக்காக காலையில் இருந்தே திருச்சி விமான நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் ஜியர் மடம் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, அதிகாலை முதலே சுகாதார பணியாளர்கள் சாலைகளில் தூசிகள் கூட இல்லாத படி சுத்தம் செய்தார்கள்.
சரியாக 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்திறங்கிய ஆளுநரின் வருகைக்காக 20 கிலோ மீட்டர் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டன. திருச்சியில் உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் ஜீயரை பார்க்க அவர் கிளம்புவதற்கு முன்பு சில மணி நிமிடங்களுக்கு முன்பே அவர் செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தனிப்பட்ட முறையில் ஜீயரை பார்க்க வந்த கவர்னருக்கு இவ்வளவு பில்டப் தேவைதானா? என்று சாதாரண மனிதர்கள் திருச்சியில் பேசிக்கொண்டனர்.
தமிழகத்தில் மட்டும், முதல்வரானாலும், ஆளுநரானாலும் அவர்கள் கடந்துபோகும் சாலையில் மணிக்கணக்காய் மக்கள் காத்துகிடப்பது என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது. பாண்டிச்சேரியில் முதல்வர் ரங்கசாமி இப்போதும் எளிமையாகவே பயணம் மேற்கொள்கிறார். கேரளா, பாண்டிச்சேரி தலைவர்களை போல தமிழக தலைவர்கள் மாற மாட்டார்களா? என பொதுமக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை.