தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சேது சமுத்திர திட்ட பிரச்னையில் தீர்வை நெருங்கி விட்டதாக கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற உலக இந்து மாநாட்டில் பங்கேற்று பேசிய நிதின் கட்கரி, ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படுத்தாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை அரசு கண்டறிந்துள்ளதாகவும், ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றும் திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ராமர் பாலம் இடிக்கப்படும் என பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிதின் கட்கரி, இதற்காக அரசு, நான்கைந்து மாற்று வழிகளை கண்டறிந்துள்ளதாகவும், அவற்றில் ஒன்றினை வல்லுனர்களுடன் இணைந்து ஆலோசித்து தேர்ந்தெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எனினும், சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், திட்டம் குறித்து விவரிக்க முடியாது என்றும் கட்கரி தெரிவித்துள்ளார்.