புதிய வாடகைத்தாய் மசோதா. லோக்சபாவில் தாக்கல் செய்த அமைச்சர்
குழந்தை இல்லாதவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொள்வதில் பல முறைகேடுகள் நடந்து வருவதாக நாடு முழுவதிலும் இருந்து பல புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் வாடகைத்தாய் முறையை ஒழுங்குபடுத்த புதிய மசோதா ஒன்றை அமல்படுத்த மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்திருந்தது.
இதன்படி நேற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா லோக்சபாவில் வாடகைத்தாய் நடைமுறையை வர்த்தகரீதியிலும் , லாப நோக்கத்திலும் பயன்படுத்துவதைத் தடை செய்யும் மசோதாவை அறிமுகம் செய்தார். இந்த மசோதா வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) மசோதா-2016 என்று அழைக்கப்படும்
இந்த மசோதாவின்படி வாடகைத்தாய் நடைமுறையை வர்த்தகரீதியில் பயன்படுத்துவதற்கு முழு அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தை இல்லாத தம்பதிகளின் நலன் கருதி, லாபநோக்கமின்றி மேற்கொள்ளப்படும் வாடகைத்தாய் முறையானது கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று மருத்துவர் சான்று அளித்தால் மட்டுமே இந்த முறையைப் பயன்படுத்த அனுமதிக்க முடியும் என்றும் 23 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களும், 26 வயது முதல் 55 வயது வரை உள்ள ஆண்களும் இந்த வாடகைத்தாய் நடைமுறைக்கு தகுயானவர்கள் என்றும் இந்த மசோதாவின் முக்கிய அம்சம் ஆகும்.