சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள மூன்று இந்தியர்களின் பெயர்களை இன்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அறிவிக்கப்பட இருக்கும் மூன்று பேர்களும் அரசியல்வாதிகள் இல்லை என்றும், இவர்கள் தவிர மேலும் சிலரின் பெயர்களை கருப்புப் பணம் பற்றிய விசாரணை தொடங்கும் போது மத்திய அரசு அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக கருப்புப் பணம் பதுக்கியவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட முடியாது என கூறிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு என்ற ஒப்பந்தத்தின்படியே கருப்புப் பணம் வைத்திருப்போர் பெயர் பட்டியலை பகிரங்கமாக வெளியிட முடியவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், வழக்கின் தன்மைக்கு ஏற்றவாறு கொஞ்சம் கொஞ்சமாக சுவிஸ் வங்கியில் கருப்புப்பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் கூறினார். அந்த அடிப்படையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் 3 நபர்களது பெயர்களை மத்திய அரசு வெளியிட உள்ளது.
இதனிடையே, அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கியுள்ளவர்களின் விவரங்களை வெளியிட்டால், காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்படும் என்று கூறியிருந்தார். ஆனால், காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், கருப்புப் பண பதுக்கல்காரர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்றும், காங்கிரஸ் வலியுறுத்தியது.
சற்று முன் வந்த செய்தி:
மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வெளியிட இருக்கும் மூன்று இந்தியர்களின் பெயர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவை
1. டாபர் நிறுவன இயக்குனர் பிரதீப் பர்மன்
2. குஜராத்தை சேர்ந்த பங்கு வர்த்தகர் பங்கஜ் சமன்லால் லோதியா
3. கோவாவை சேர்ந்த கனிம சுரங்க அதிபர் ராதா டிம்போலா