பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 1954ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருதினை மத்திய அரசு வழங்கி வருகிறது. கடந்த வருடம் இந்த விருது சச்சின் தெண்டுல்கர் மற்றும் சி.என்.ராவ் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது. இதுவரை இந்தியாவில் பாரத ரத்னா விருதை 43 பேர் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வருடம் பாரத ரத்னா விருதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருடன் கன்ஷிராம் அவர்களுக்கும் இந்த விருது கிடைக்கும் என தெரிகிறது.
மேலும் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஓவியர் ரவிவர்மா ஆகியோர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்க பாரத பிரதமர் மோடி விரும்புவதாக செய்திகள் கூறுகின்றன. எனவே இந்த வருடம் நான்கு அல்லது ஐந்து நபர்களுக்கு பாரத ரத்னா விருது கிடைக்கும் என கூறப்படுகிறது. கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சகம் ஐந்து விருதினை தயார் செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.