அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது நடவடிக்கைக்கு ஆளான தேவ்யானி கோப்ரகடே மீது மத்திய அரசு திடீர் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் அமைச்சகப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றிய தேவ்யானி அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண் சங்கீதாவுக்கு குறைவான சம்பளம் வழங்கியதாகவும், அவரை கொடுமைப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
இது தொடர்பாக அவரை விசாரணை செய்த அமெரிக்க போலீசார் அவரை கைது செய்யப்பட்டு, அவரது ஆடைகளை களைந்து சோதனை செய்தனர்.. இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து அவர் ரூ.1.5 கோடி பிணைத்தொகையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் இந்தியா திரும்பிய தேவயானிக்கு வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் கூட்டு வளர்ச்சிப் பிரிவின் இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தேவ்யானி சமீபத்தில் தனது தந்தை மீதான ஆதர்ஷ் ஊழல் குற்றச்சாட்டு சம்பந்தமாகவும், தனது குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை இருப்பது குறித்தும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.
அரசின் அனுமதி பெறாமல் ஊடகத்திற்கு பேட்டியளித்தது மற்றும் தனது கணவர் மற்ற்றும் குழந்தைகள் இருவருக்கும், அமெரிக்க குடியுரிமை பெறப்பட்ட தகவலை மறைத்தது குறித்து அவர் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மீது நிர்வாக ரீதியிலான விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில் வெளியுறவுத்துறையின் கீழ் இயங்கும் கூட்டு வளர்ச்சிப் பிரிவின் இயக்குநர் பொறுப்பில் இருந்து தேவ்யானி நீக்கப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ள அவர் மீது, மேலும் துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.