மாதந்தோறும் நேதாஜியின் 25 ரகசிய ஆவணங்களை வெளியிட மத்திய அரசு முடிவு
இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ரகசிய ஆவணங்களை ஏற்கனவே மத்திய அரசும், மேற்குவங்க அரசும் சமீபத்தில் வெளியிட்ட நிலையில் மாதந்தோறும் 25 ஆவணங்களை மத்திய அரசு வெளியிடவுள்ளதாகவும், அதன்படி மேலும் 25 ரகசிய ஆவணங்களை இம்மாத இறுதியில் வெளியிடப்பட இருப்பதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.,
இதுகுறித்து புதுடெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியபோது, “நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் ரகசிய ஆவணங்களில், மாதந்தோறும் 25 ஆவணங்களை வெளியிட இருக்கிறோம். அதன்படி, இந்த மாதம் 25 ரகசிய ஆவணங்களை வெளியிட உள்ளோம். இந்த மாதம் 23ஆம் தேதி, அந்த 25 ரகசிய ஆவணங்களும் வெளியிடப்படலாம். அதைத் தொடர்ந்து, மாதந்தோறும் 23ஆம் தேதி நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியிடப் படக்கூடும் என்றார் மகேஷ் சர்மா.
தைவான் நாட்டில் கடந்த 1945ஆம் ஆண்டு நேரிட்ட விமான விபத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதை அவரது உறவினர்களும், ஆதரவாளர்களும் நம்ப மறுக்கின்றனர். இந்நிலையில், புதுடெல்லியில் கடந்த ஆண்டு தம்மைச் சந்தித்த நேதாஜியின் உறவினர்களிடம், மத்திய அரசிடம் இருக்கும் ரகசிய ஆவணங்கள் நேதாஜியின் 119ஆவது பிறந்த தினமான ஜனவரி மாதம் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதியளித்தார்.
அதன்படி, டெல்லியில் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடம் இருந்த 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை மோடி வெளியிட்டார். 16,600 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணங்களில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் முதல் கடந்த 2007ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வு பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. டெல்லியில் இருக்கும் தேசிய ஆவணங்கள் காப்பகத்தில், கணினிமயமாக்கப்பட்டு அந்த ஆவணங்கள் பொது மக்களின் பார்வைக்கு தற்போது வைக்கப்பட்டுள்ளன.