சென்னை ஆட்டோக்களுக்கு ஜிபிஆர்.எஸ் கருவி. 4 மாதம் அவகாசம் அளித்த ஐகோர்ட்

சென்னை ஆட்டோக்களுக்கு ஜிபிஆர்.எஸ் கருவி. 4 மாதம் அவகாசம் அளித்த ஐகோர்ட்

Autoதமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்டோக்களுக்கும் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்த வேண்டும் என்றும் குறிப்பாக சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு 4 மாதங்களிலும் அதன் பின்னர் மாநிலத்தின் பிற பகுதிகளில் ஓடும் ஆட்டோக்களுக்கும் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த வேண்டும் என்ற பிறப்பித்த உத்தரவே காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையில் இந்த உத்தரவு எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

கோவையை சேர்ந்த லோகு என்பவர் பதிவு செய்த பொதுநல வழக்கில்தான் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் தாக்கல் செய்த மனுவில்,“பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆட்டோவில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க வசதியாக புகார் எண் இருக்க வேண்டும். ஆட்டோவில் கட்டண விவரப் பட்டியல் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 நிபந் தனைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. ஆனால் இந்த நிபந்தனைகள் எதையும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து விளக்கமளித்த தலைமை வழக்கறிஞர் மணிஷங்கர், ‘ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக எல்காட் நிறுவனம் மூலமாக ஆட்டோக்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தும் பணி 4 மாதங்களில் நிறைவடையும். இதற்காக ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் ஆட்டோ ஓட்டுநர்கள் குறித்து எஸ்எம்எஸ் மூலமாக புகார் அளிக்க மென்பொருள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது’ என்று கூறினார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட், ‘சென்னையில் உள்ள ஆட்டோக்களில் ஜிபிஆர்எஸ் கருவிகள் 4 மாதங்களில் பொருத்தப்படும் எனவும், அதன்பிறகு மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள ஆட்டோக்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்தக் காலக்கெடுவுக்குள் சென்னையில் ஜிபிஆர்எஸ் கருவிகளை பொருத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும் டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply