சென்னையில் இயங்கும் ஆட்டோக்களுக்கு கூடிய விரைவில் ஜி.பி.எஸ். கருவிகள் அடங்கிய மீட்டர்களை பொருத்த நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நேற்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டசபையில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது, ஆட்டோக்களில் ஜி.பி.எஸ் பொருத்துவது குறித்து சட்டமன்ற உறுப்பினர் அ.செளந்திரராஜன் கேட்ட கேள்விகளும் அதற்கு போக்குவரத்து அமைச்சர் வி.செந்தில் கூறிய பதில்களும் பின்வருமாறு:”
அ.செளந்திரராஜன்: சென்னையில் ஆட்டோக்களுக்கு மீட்டர்கள் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. அதில் குளறுபடிகளும் சிக்கல்களும் இல்லாமல் இருக்க வேண்டுமானால் பெருகி வரும் டீசல், பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்குத் தேவையான முத்தரப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்ட மீட்டர்கள் விலையில்லாமல் பிப்ரவரிக்குள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். ஆனால் இன்னும் வழங்கப்படவில்லை.
அமைச்சர் செந்தில் பாலாஜி: சென்னை மாநகரத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்த பின்னர் மக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து வருகிறார்கள். ஆட்டோக்களுக்கான ஜி.பி.எஸ். மீட்டர் வழங்கும் பணி மக்களவைத் தேர்தல் காரணமாக 3 மாதம் தாமதமாகியது. விலையில்லா மீட்டர்களை வாங்க எல்காட் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்து விரைவில் விலையில்லா மீட்டர்கள் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் வழங்கப்படும்.
அ.செளந்திரராஜன்: சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்திலும் மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் பயணிகள் முன்கூட்டியே கட்டணம் செலுத்தி ஆட்டோவில் பயணிக்கும் வசதியைத் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில், விரைவில் உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.