அந்நாட்களில் பெண்கள் கூட்டமாக நீராட செல்வார்கள். அப்படி செல்லும் பொது இருள் அகலாத காலமாக இருக்கும். அவ்வாறு குளிக்கும் சமயத்தில் வழுக்கி விழுதல், தாமரை கொடியில் சிக்கி கொள்ளுதல், சுழலில் மாட்டி இறந்து போகும் பெண்கள் அநேகம். இப்படி அகால மரணமடைந்தவர்கள் ஆவியாகி விடுவதுண்டு. அவர்கள் அதே ஆற்றங்கரை அருகில் அதே இளமையுடன் பல காலம் விளையாடி மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும் இவர்கள் அருள் இருந்தால் நம் காரியங்கள் எளிதில் வெற்றியடையும் என்பது அந்த கால நம்பிக்கை.
ஆகவே தான் தென்னக குடும்பங்களில் திருமணத்திற்க்கு முன் கன்னிமார்களை அழைத்து பூஜை செய்வது வழக்கம். ஆற்றங்கரைக்கு குடும்பத்துடன் சென்று பொங்கலிட்டு பம்பை ,உடுக்கை அடித்து வழிபடுவார்கள். அப்போது அங்குள்ள கன்னிமார்களின் ஆவிகள் கூடியிருக்கும் யாரேனும் மேல் வந்து குறி சொல்லுமாம்.இவ்வழக்கத்தை இன்றும் பல்வேறு கிராமங்களில் காணலாம். இந்த ஆவிகள் தான் கன்னிமார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மனப்பாக்கம், குடியாத்தம் போன்ற ஊர்களில் கன்னிமார்களுக்கு தனி கோயில்கள் உள்ளன.
இப்படி இறந்து போன பெண்கள் ஏராளம். அவர்கள் அனைவருக்கும் கோவில் அமைத்து கொண்டிருக்க முடியாதென்பதால் அவர்கள் சார்பாக ஏழு பெண் சிலைகளை வைத்து வணங்க ஆரம்பித்தனர். அவர்களை குடம் ஏந்தியவர்களாகவோ மலர் ஏந்தியவர்களாகவோ அமைக்கின்றனர்.
ஆவிகள் மூலம் குறி கேட்கும் வழக்கம் தமிழ் நாட்டில் கன்னிமார் வழிபாட்டில் இருந்து தான் ஆரம்பித்தது என்றே கூறலாம்.