கிரீஸ் நாட்டின் கடன் மீட்பு திட்ட வாக்கெடுப்பின் முடிவு. பங்குச்சந்தைகள் பாதிக்கப்படுமா?

greeceகடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸ் நாட்டில் சர்வதேச நிதியத்தின் தவணையை செலுத்துவது தொடர்பாக நேற்று பொது வாக்கெடுப்பு முடிவடைந்து, தற்போது வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பின் முடிவு உலகெங்கிலும் உள்ள பங்குச்சந்தையை பெருமளவு பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நிதி ஆணையமான ஐ.எம்.எப் அமைப்பிடம் கிரீஸ் நாடு 1.6 பில்லியன் யூரோ கடன் வாங்கியுள்ளது. ஆனால் கடும் நிதி நெருக்கடி காரணமாக நிதி ஆணையத்திற்கு  தவணைத் தொகையை கிரீஸ் நாடு கட்டத் தவறியது. இதனை உடனடியாக செலுத்த முடியாத நிலையில், தற்போது கிரீஸ் நாட்டு அமைச்சர்கள், ஐ.எம்.எப் அமைப்பின் கடன் தொகையைச் செலுத்தக் கூடுதலாக 2 ஆண்டுகள் கால அவகாசம் கோரி பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் புதிய கடன் வழங்க கோரி, ஐரோப்பிய யூனியனிடம் கிரீஸ் நாடு கேட்டுள்ளது. ஆனால் இதற்கு ஐரோப்பிய யூனியன் கிரீஸ் நாட்டிற்கு கடன் தர மறுப்பு தெரிவித்த நிலையில் 1.6 பில்லியன் யூரோ தவணையை செலுத்த கிரீஸ் மீது சர்வதேச நிதி ஆணையம் நடவடிக்கை எடுக்க முன்வந்தது.

நிதி நெருக்கடியால் கிரீஸில் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் தற்போது மூடப்படடுள்ளது. இந்த நிலை தொடரும் என்று அந்நாட்டு பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் அறிவித்திருந்தார். இதனால் அந்நாட்டு மக்கள் உடனடியாக வங்கிகள் மற்றும் சந்தையில் இருக்கும் முதலீடுகள் மற்றும் சேமிப்புகளைக் குறைக்க இது வழிவகுத்து விடும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.

வங்கிகள் மூடப்பட்டதால் கிரீசில் ஏ.டி.எம். உள்ளிட்ட அடிப்படை சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸ் நாட்டில் இன்று கடன் மீட்புத் திட்டம் தொடர்பாக மக்களின் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.

நிபந்தனைகளை ஏற்பதன் மூலம் கிரீஸ் மக்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாவார்கள் என்று அந்நாட்டுப் பிரதமர் அலெக்சிஸ் ஸிப்ராஸ் கருதுகிறார். எனவே, இந்த நிபந்தனைகளை ஏற்பதா, வேண்டாமா என்று முடிவுசெய்ய  இந்த வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. 

இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் சுமார் 62 சதவீத மக்கள் சிக்கன நடவடிக்கைக்கு எதிராகவும், 38% சதவீத மக்கள் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர். இதனால் கிரீஸ் யூரோ நாணயத்தை இனிமேல் பயன்படுத்தாது என்றும், ஐரோப்பிய யுனியனிலிருந்து வெளியேறும் எனக் கூறப்படுகிறது.

கீரிசின் நாட்டு மக்களின் இந்த முடிவு குறித்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் இன்று விவாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply